தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் கடந்த 2018 - 2019 ஆம் ஆண்டின்போது வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பிடிஓவாக கிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வந்தார். அந்த காலகட்டத்தில் அரசு திட்டங்களில் முறைகேடு செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணித்து வந்துள்ளனர். இதையடுத்து பாப்பிரெட்டிப்பட்டியில் பிடிஓவாக கிருஷ்ணன் பணியாற்றி வரும் நிலையில், தற்போது தர்மபுரியில் தீயணைப்புத்துறை அலுவலகம் பின்புறம் உள்ள கருவூல காலனியில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வெளியிட்டுள்ள முதற்கட்ட அறிக்கையின் மூலம் பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 4 மண்டலமாகப் பிரிக்கப்பட்ட 33 பஞ்சாயத்துகளுக்கு ப்ளீச்சிங் பவுடர் வாங்கியதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. ப்ளீச்சிங் பவுடர் வாங்கியதில் முறைகேடு செய்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து பிடிஓ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதே போன்று சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் மலர்விழி ஐ.ஏ.எஸ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்ட ஆட்சியராக மலர்விழி இருந்தபோது முறைகேடு செய்ததாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இவர் கடந்த 2018 - 2020 ஆம் ஆண்டு வரை தர்மபுரி மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, 251 பஞ்சாயத்துகளுக்கு வாங்கக்கூடிய ரசீதை அதிக விலை கொடுத்து வாங்கியதன் மூலமாக 1.31 கோடி ஊழல் செய்துள்ளதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த தனியார் ரசீது பிரிண்ட் நிறுவனர் ஜாகிர் உசேன், பழனிவேல் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.