Skip to main content

பத்திரிகையாளர்கள் செயல்பாட்டை பாராட்டிய ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ்!!

Published on 09/06/2021 | Edited on 09/06/2021
IAS and IPS praised the performance of journalists

 

கரோனா காலம் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வியல் சூழலையும் நிலைகுலைய வைத்து வருகிறது. அதில் செய்தியாளர் சமூகமும் கடுமையான நெருக்கடியில் சிக்கித் திணறி வருகிறது. இந்த நிலையில் தான், ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் சார்பில்  நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விழா 9ந் தேதி காலை ஈரோடு பெரியார் மன்றத்தில்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் ரமேஷ் முன்னிலை வகிக்க சங்கத்தின் செயலாளரும் நக்கீரன் இதழின் முதன்மை செய்தியாளரான ஜீவாதங்கவேல் தலைமை வகித்து, கரோனா காலத்தில் பத்திரிகையாளர் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அதற்காக உதவ ஈரோடு பத்திரிகையாளர் நலச் சங்கம் எடுத்த முயற்சி ஆகியவை பற்றி பேசினார்.

 

மசாலா பொருட்கள் தயாரிப்பில் தமிழகத்தில் முன்னணி நிறுவனமாகச் செயல்படும் ஈரோடு சக்தி மசாலா நிறுவனம், மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் தலா 25 கிலோ கொண்ட  ஒரு சிப்பம் பொன்னி அரிசி மற்றும் மசாலா பொருட்களைக் கொடுத்தனர். மேலும், உதவும் மனப்பான்மையுடன்  சில நல்ல மனிதர்களின் பங்களிப்போடு சங்கத்தின் முயற்சியால் பருப்பு, புளி, கோதுமை என மொத்தம் 19 வகையான சமையல் பொருட்களும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஈரோடு மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி.யாக பதவி ஏற்ற டாக்டர் சசிமோகன் ஐ.பி.எஸ். கலந்து கொண்டு நிவாரண பொருட்களை பத்திரிகையாளர்களுக்கு வழங்கினார். மேலும் அவர் பேசுகையில், “தவறுகளைச் சுட்டிக் காட்டவும், அவற்றை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வரவும், நல்லது நடப்பவற்றைப் பத்திரிகைகள் ஊக்குவிக்கவும் வேண்டும்" என்றார். மேலும் அவர், "தற்போது உள்ள நெருக்கடி கால கட்டத்தில் சக தோழர்களுக்கு உதவும் மனப்பான்மையுடன் ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் இது போன்ற சிறப்பான செயலை செய்துள்ளதைப் பாராட்டுகிறேன்” என்றார்.

 

IAS and IPS praised the performance of journalists

 

சென்ற வருடம் இதே போன்று கரோனா கால ஊரடங்கு நெருக்கடியின் போது பத்திரிகையாளர்களின் குடும்பச் சூழலை அறிந்து சக்தி மசாலா நிறுவனம் ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் தலா 25 கிலோ கொண்ட அரிசி சிப்பம் மற்றும் மசாலா பொருட்களைக் கொடுத்தனர். அவற்றை ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் செய்தியாளர்கள் குடும்பங்களுக்கு வழங்கியது.  இந்த வருடமும் சக்தி மசாலா நிறுவனத்தின் உதவி பொருட்கள் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில், ஈரோடு, சத்தியமங்கலம், புளியம்பட்டி, நம்பியூர், கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி, பெருந்துறை, சென்னிமலை, அரச்சலூர், சிவகிரி, கொடுமுடி, மொடக்குறிச்சி என மாவட்டம் முழுக்க இருந்து 200க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் நேரில் வந்து நிவாரண பொருட்களைப் பெற்றுச் சென்றனர். சங்க பொருளாளர் ரவிச்சந்திரன், உதவி பொருட்கள் வழங்கிய சக்தி மசாலா நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்தார். சங்க துணைத் தலைவர்கள் சுப்பிரமணியம், மூர்த்தி, துணை செயலாளர்கள் ராஜா, நவீன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தி.க.சண்முகம், பழனிச்சாமி, மகேந்திரன், விஜய் சாய்,பார்த்திபன், பாஸ்கரன், ஜான்சன், வேலுச்சாமி, முருகேசன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

 

பத்திரிகையாளர்களின் இன்ப துன்பத்தில் பங்கெடுத்து இது போன்ற நெருக்கடியான கால கட்டத்தில் குடும்ப கஷ்டத்தைப் போக்கும் வகையில் எவ்வித பாகுபாடும் இல்லாமல் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து பத்திரிகையாளர்களின் குடும்பங்களும் நேரடியாகப் பயன்பெறும் வகையில் அரிசி, மசாலா பொருட்கள் மற்றும் 19 வகையான உணவுப் பொருட்களை தற்போது ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் வழங்கியிருக்கிறது. இவை மட்டுமல்ல நலச் சங்கம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட அமைச்சர் சு.முத்துச்சாமி, கடந்த 7 ந் தேதி அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் தலா 25 கிலோ கொண்ட ஒரு சிப்பம் அரிசி வழங்கினார். இந்த நிகழ்வும் ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் முன்னின்று நடத்திய நிகழ்வாகும். இந்நிலையில், தமிழகத்திற்கே முன்னுதாரணமாகச் செயல்படும் ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்கத்தின் சிறப்பான  செயல்பாட்டைப் பாராட்டுவதாக  ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

 


 

சார்ந்த செய்திகள்