சமீப காலமாகவே பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் வரலாற்றில் முதல்முறையாக பெட்ரோல் விலை 90 ரூபாயைக் கடந்துள்ளது. பெட்ரோல் விலையுயர்வால் மக்களின் அடிப்படை அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் உருவாகும் சூழலில், விலைவாசி ஏற்றம் குறித்த அச்ச உணர்வு அதுவும், இந்தக் கரோனா காலத்தில் மக்களிடையே மேலோங்கியுள்ளது என்றும் கூறலாம்.
இந்நிலையில் தமிழகம் வந்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று (19/02/2021) மாலை கலந்துகொண்டார். இந்நிலையில் இன்று தற்பொழுது சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பெட்ரோல் டீசல் விலையேற்றம் குறித்த கேள்விக்கு, ''பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க வரி குறைப்பு குறித்து மாநில, மத்திய அரசுகள் ஆலோசிக்க வேண்டும். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவர ஜி.எஸ்.டி கவுன்சில்தான் முடிவு செய்ய வேண்டும். நான் ஒரு மத்திய அமைச்சர் மட்டுமே, என்னால் மட்டும் முடிவு செய்ய முடியாது.'' என்றார். மேலும், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெணெய் நிறுவனங்கள்தான் முடிவு செய்கின்றன எனவும் விளக்கமளித்தார்.
கடந்த 16.02.2021 அன்று மதியம் சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “மக்கள் மாற்று எரிபொருளைப் பயன்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது. விவாயிகள் ட்ராக்டருக்கு இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தினால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கலாம்” என பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க யோசனை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.