வேல்ஸ் கல்விக்குழுமத்தின் நிறுவனர், வேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ் பிறந்த தினமான அக்டோபர் 7ஆம் தேதியை ஆண்டுதோறும் வேல்ஸ் குடும்ப விழாவாக கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டின் வேல்ஸ் குடும்ப விழா சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் இண்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது. விழாவில் நடிகர் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.
’’இது நட்பு உறவாக மாறும் விழா. தாயார் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் நடக்கிறது. இனி நண்பர் கமல்ஹாசன் என்று அழைக்காமல், அண்ணன் கமல்ஹாசன் என்றே அழைக்கலாம். வெற்றியாளர்களின் தாயார் விழாவில் உடன் அமர்ந்து பிள்ளைகளை ரசிப்பதை பார்ப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பரிசு கொடுப்பது, பொன்னாடை போர்த்துவது எங்கள் பாணியில்லை. அவருக்கு நான் அண்ணனாக மாறியது தான் இந்த பிறந்தநாள் பரிசாக அளிக்கிறேன். கணேஷின் தந்தையார் ஐசரி வேலன் அரசியலில் பல பதவிகள் கிடைத்தும் கூட, கலையின் மீது இருந்த தீராத ஆர்வத்தால் வாழ்நாளின் கடைசி வரை நடித்தார். இங்கு பறவைகளை பற்றி பேசினார்கள். நான் மக்களுக்காக பறக்கிறேன், உடன் யார் வந்தாலும் சேர்ந்து பறப்பேன். நான் கோழிக்குஞ்சுகளுடன் வளர்ந்த கழுகு. என் கொடியும் நானும் பறப்பது மக்களுக்காக தான்.
டெல்லி சென்றபோது, என்னை யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வீர்கள் என்று கேட்டார்கள், எங்கள் மரபணுவை மாற்ற முயற்சிக்காதவர்களுடன் தான் நான் கூட்டணி வைப்பேன். நான் அரசியலுக்கு முன்பே வந்திருக்கலாமே என்றும் கூட எனக்கு தோன்றியது. எஞ்சிய நாட்களை இப்படி கழிக்கிறார்களே என்கிறார்கள். எஞ்சிய நாட்கள் இனி மக்களுக்காக தான். 8 மாத குழந்தை தான், ஆனால் நாங்கள் குழந்தை இல்லை என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இனி அரசியலை மாற்றப்போகும் கூட்டம் இளைஞர் கூட்டம். அவர்களுடன் நான் தொடர்ந்து உரையாடி வருகிறேன், இனியும் தொடர்வேன்’’ என்றார் சிறப்பு விருந்தினர் உலக நாயகன் கமல்ஹாசன்.
விழாவில் ஐசரி கணேஷ் அவர்களின் தாயார் புஷ்பா ஐசரி வேலன், வேல்ஸ் பல்கலைக்கழக பதிவாளர் வீரமணி, ஆர்த்தி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். பல்வேறு முக்கிய பிரபலங்கள், வேல்ஸ் குழும பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.