வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜல்தி பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 71 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், ’’தமிழகத்தில் பிற கட்சிகள் 5 ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டு அடுத்த தேர்தலின் போது மக்களிடம் போய் வாக்கு சேகரிக்கும் போது வெட்கப்படுவார்கள். ஏனென்றால் அவர்கள் அந்த ஐந்து ஆண்டுகளில் எந்த திட்டமும் செயல்படுத்தாததால் மக்களை சந்திக்க பயப்படுவார்கள்.
ஆனால் அதிமுக முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா மக்களுக்காக வாரி வழங்கிய திட்டங்களை தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் எண்ணற்ற திட்டங்களை வகுத்து மக்களுக்காக திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனர். ஆகையால் அதிமுக தொண்டர்கள் நம் ஆட்சியைப்பற்றி மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி தைரியமாக வாக்கு சேகரிக்க வேண்டும்’’ என்றார்.
மேலும் இன்று காலையில் வாட்ஸ் -அப் பதிவில் பரவலாகி வந்த ஒரு வீடியோவை பார்த்தேன். அதில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமிய இளைஞர்கள் தீவிரவாதிகள் என பேசியுள்ளார். இந்த பேச்சு, அவர் என்ன நடந்தது என்று தெரியாமல் யோசிக்காமல் பேசி இருப்பது சிரிப்பாக இருக்குது. கடந்த சிலநாட்களுக்கு முன்பு வாணியம்பாடியில் ஒரு விபத்தில் உயிரிழந்த இந்து சகோதரர் ராதாகிருஷ்ணன் என்பவருக்கு ஆதரவாக செயல்பட்டு காவல்துறையினரை எதிர்த்து போராடிய இஸ்லாமிய இளைஞர்களை தீவிரவாதிகள் என்று எச்.ராஜா கூறியதற்கு கண்டனத்தை தெரிவிக்கிறேன் என்றார்.
கூட்டணிக்கு தலைமை தாங்கும் தேசிய கட்சியின் செயலாளரை தமிழக அமைச்சர் கண்டித்து பேசியது வேலூர் பாஜக வினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.