அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் நகரில் வசித்துவருபவர் செல்வராஜ் (58). இவரது மனைவி உஷாராணி. இவர்களுக்குப் பொறியியல் படித்த இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். செல்வராஜ், அதே பகுதியில் உள்ள ஸ்ரீபுரந்தான் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்துவருகிறார். இவரது மனைவி உஷாராணி, உஞ்சினி அரசுப் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.
நேற்று முன்தினம் (05.10.2021) வழக்கம்போல் ஸ்ரீபுரந்தான் பள்ளிக்குச் சென்ற ஆசிரியர் செல்வராஜ், பள்ளி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் சொந்த ஊரான உடையார்பாளையம் நோக்கி புறப்பட்டுள்ளார். ஆனால், இரவான பிறகும்கூட செல்வராஜ் வீட்டுக்கு வந்து சேரவில்லை. அதனால், அவரது குடும்பத்தினர் அவர் செல்ஃபோன் எண்ணுக்கு தொடர்புகொண்டுள்ளனர். அவர் ஃபோனை எடுக்கவில்லை. இதனால் பதற்றமடைந்த அவர்கள், அவர் வேலை பார்க்கும் பள்ளியின் சக ஆசிரியர்களிடம் தொடர்புகொண்டு கேட்டுள்ளனர். அவர்கள், செல்வராஜ் பள்ளி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்று வெகு நேரம் ஆகிறது என்று தகவல் கூறியுள்ளனர். இதனால், அவர்கள் மேலும் பதற்றமடைந்தனர்.
இந்த நிலையில், ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் இருந்து உடையார்பாளையம் வரும் வழியில் சோழன் குறிச்சி அருகே சாலையோரம், ஒருவர் தனது இருசக்கர வாகனத்திற்கு அருகே இறந்து கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் உடையார்பாளையம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு விரைந்த காவல்துறையினர், செல்வராஜ் குடும்பத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து செல்வராஜின் மனைவியும், மகள்களும் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்துள்ளனர்.
செல்வராஜ் வரும் நேரத்தில் தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்துள்ளது. சாலையில் ஆள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இல்லாமல் இருந்துள்ளது. இந்த நிலையில், செல்வராஜ் உடலில், கழுத்தில், இடுப்பில் வெட்டப்பட்டது போன்ற காயங்கள் இருந்துள்ளன. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த மரணம் குறித்து அவரது குடும்பத்தினர் காவல்துறையில் அளித்துள்ள புகாரில், அவரது மரணத்தில் மர்மம் உள்ளது. விபத்தில் அவர் உயிரிழக்க வாய்ப்பு இல்லை. மேலும், அவரது கழுத்து, இடுப்பு போன்ற இடங்களில் வெட்டுக் காயங்கள் உள்ளன. அது எப்படி ஏற்பட்டிருக்கும்? எனவே யாரோ வழிமறித்து அவரை வெட்டிக் கொலை செய்திருக்க வேண்டும் என்று சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் ஆசிரியர் செல்வராஜ் மரணம் குறித்து வழக்குப் பதிவுசெய்து, விபத்தில் இறந்தாரா? கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும், ஆசிரியர் செல்வராஜ் அப்பகுதியில் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவது உண்டு என்றும் அப்படி பணம் கொடுக்கல் வாங்கலில் யாருக்காவது முன்விரோதம் இருந்து, அவரது நடமாட்டத்தைக் கண்காணித்து, அவரை வழிமறித்து கொலை செய்திருக்கலாமா? என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். பிரேதப் பரிசோதனையில் ஆசிரியரின் மரணம் குறித்த சந்தேகங்களுக்கு விடை கிடைக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.