கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சேலத்தில் போலீசாரை மிரட்டும் தொனியில் பேசிய இந்து முன்னணி நிர்வாகி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகர பகுதிக்குப் உட்பட்ட முக்கிய சந்திப்பு பகுதிகளில் தேவையின்றி சுற்றுவோர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். இதற்காக கொண்டலாம்பட்டி, அஸ்தம்பட்டி, சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட வாகன சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்தச் சூழலில் நேற்று முன்தினம் (24.06.2021) இரவு வெளியே சுற்றிய வாலிபர் ஒருவரைக் கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கேட்டபோது, சரியான பதில் கொடுக்கவில்லை. அவரிடம் வெளியே சுற்றுவதற்கான எந்த உரிய ஆவணங்களும் இல்லை என்பதால் 200 ரூபாய் அபராதம் விதித்திருக்கின்றனர். இதைத் தெரிந்துகொண்ட அந்த வாலிபரின் நண்பரான சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட இந்து முன்னணி பிரமுகர் செல்லப்பாண்டியன் மற்றும் அவரது நண்பர் தமிழரசன் ஆகிய இருவரும் நேற்று மாலை கொண்டலாம்பட்டிக்கு வந்து அந்தப் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் இடையே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தது. அத்துமீறி காவல்துறையினரிடம் அநாகரிகமாக பேசுவது, கொலை மிரட்டல் விடுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. இது தொடர்பாக, செல்லபாண்டியன் மற்றும் அவரது நண்பர் தமிழரசன் ஆகிய இருவர்மீதும் 4 பிரிவுகளின்கீழ் கொலை மிரட்டல், காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தல், அநாகரிகமாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது. விரைவில் இந்து முன்னணி பிரமுகர் பாண்டியனை கைது செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.