முகக்கவசம் அணியாமல் பொதுவெளியில் சுற்றிய நபருக்கு 200 ரூபாய் அபராதம் விதித்ததால் ஆத்திரம் அடைந்த இந்து முன்னணி நிர்வாகி, காவல்துறையினரைப் பார்த்து, “சங்கை அறுத்துடுவேன்” என்று கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா இரண்டாம் அலையின் பரவும் வேகம் முதல் அலையைக் காட்டிலும் சற்று அதிகமாக இருந்துவருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுவெளியில் தனிமனித இடைவெளியின்றி சுற்றுபவர்கள், முகக்கவசம் அணியாத நபர்கள் ஆகியோருக்கு அபராதம் விதிக்கும்படி அரசு உத்தரவிட்டது.
அதன்படி, கரோனா தடுப்பு விதிகளை மீறி சுற்றுவோர் மீது காவல்துறையினரும், உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளும் அபராதம் விதித்துவருகின்றனர்.
இந்நிலையில், சேலம் கொண்டலாம்பட்டி காவல் நிலைய காவல்துறையினர், கொண்டாலம்பட்டி ரவுண்டானா அருகே சோதனைச் சாவடி அமைத்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். அங்கு பணியில் இருந்த காவல்துறையினர் முகக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவருக்கு எச்சரிக்கை செய்ததோடு, 200 ரூபாய் அபராதம் விதித்தனர். வசூலிக்கப்பட்ட அபராதத் தொகைக்கு உரிய ரசீதும் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து இந்து முன்னணி அமைப்பின் கொண்டலாம்பட்டி ஒன்றிய நிர்வாகி ஒருவர், நேற்று முன்தினம் (ஜூன் 25) மாலை, அபராதம் விதித்த காவல்துறையினரிடம் நேரில் சென்று தகராறில் ஈடுபட்டார்.
“அபராத தொகையை ஒழுங்கு மரியாதையாக திருப்பித் தராவிட்டால் சங்கை அறுத்துடுவேன்.... பார்க்கிறியா... உனக்கு வேலை இல்லாமல் செய்கிறேன் பார்க்கிறியா...” என பகிரங்கமாக மிரட்டியதோடு, ஆபாச வார்த்தைகளாலும் வறுத்தெடுத்தார்.
இதற்கெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாத காவல்துறையினர், இந்து முன்னணி நிர்வாகியின் அலப்பறையை செல்ஃபோனில் வீடியோவாக பதிவுசெய்து, சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். சற்று நேரத்தில் இந்த வீடியோ பதிவு, தமிழ்நாடு முழுவதும் சமூக ஊடகங்கள் வாயிலாக பேசுபொருளானது.
விசாரணையில், காவல்துறையினரிடம் குதியாட்டம் போட்டவர் பெயர், செல்லபாண்டியன் என்பதும், சேலம் சூரமங்கலம் மண்டல பொறுப்பாளராக உள்ளார் என்பதும் தெரியவந்தது.
சம்பவத்தன்று மாலையில் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே காவல்துறையினரின் சோதனைச் சாவடிக்கு வந்த செல்லபாண்டியன், வந்த வேகத்திலேயே அவர்களைக் கண்ணியக்குறைவாக பேசத் தொடங்கினார்.
“டூட்டி போட்டா சும்மா வந்து உட்கார்ந்துட்டு போயிடணும். தேவையில்லாமல் வழக்கு போடக்கூடாது. கரோனாவை நீங்கதான் காப்பாத்தப் போறீங்களா...? உள்ளூர்க்காரன் மேல வழக்கு போடுறீங்க? செக் போஸ்டை நொறுக்கிடுவேன். இன்னும் கொஞ்சம் நேரத்துல இந்த செக்போஸ்டே இல்லாம பண்ணிடுவேன். நான் இந்த ஒன்றியத் தலைவன்...
இந்து முன்னணினா மரியாதை கொடுக்கணும். ஏய்... நீ முஸ்லிமா இந்துவா?” என காவல்துறையினரைப் பார்த்து அதட்டி உருட்டியவர், திடீரென்று பணியில் இருந்த காவலர்களை அடிக்கப் பாய்ந்தார். பின்னர் முகக்கவசத்தைத் திறந்து காட்டிய அவர், “என் முகத்தை நன்றாக பார்த்துக்கோ.... சங்கை அறுத்துடுவேன். நான் இந்து முன்னணியோட கொண்டலாம்பட்டி ஒன்றியத் தலைவன்... உனக்கு என்ன பவர் இருக்கோ... அந்த பவர் எனக்கும் இருக்கு... கொண்டலாம்பட்டியே என் கன்ட்ரோல்ல இருக்கு... என்ன அராஜகம் பண்றீங்களா... நானும் பண்ணுவேன்...” என ஏக வசனத்தில் எகிறினார்.
மேலும், “கொண்டலாம்பட்டியில் எங்கெல்லாம் சாராயம் விக்கிறாங்கனு தெரியுமா? நான் சொல்லட்டுமா... நீ போயி அவன் மேல கேஸ் போடு... மாமூல் வாங்குறியா.... நீ லஞ்சம் வாங்குறியா... நேத்துதான் முருகேசனை அடிச்சுக் கொன்னீங்க... பாத்துட்டே இரு... உன் வேலைய காலி பண்றேனா இல்லையானு...,” என மேலும் உதார் விட்டார்.
இந்து முன்னணி நிர்வாகி மிரட்டும் நான்கு வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, மற்ற காவலர்கள் அவரை ஒருவழியாக சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து சம்பவ இடத்தில் இருந்த காவலர்கள், உயரதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து, இந்து முன்னணி நிர்வாகி செல்லபாண்டியன் மீது கொலை மிரட்டல், ஆபாசமான வார்த்தைகளால் திட்டுதல், அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், மத உணர்வைத் தூண்டும் வகையில் பேசுதல் ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர். இதையறிந்த செல்லபாண்டியன் திடீரென்று தலைமறைவாகிவிட்டார். அவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.