நாடு முழுவதும் ஒரு மொழி என்பது மிகவும் அவசியம், அதுதான் உலகளவில் இந்தியாவிற்கான அடையாளத்தை தரும் எனவும், அதிக மக்களால் பேசப்படும் இந்தி மொழிதான் அதை அடைவதற்குரிய மொழி எனவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ள நிலையில், இது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகத்தில் பெரும் எதிர்ப்பை காட்ட துவங்கியது. திமுக இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டத்தை அறிவித்தது. இந்நிலையில் செப்டம்பர் 18ந் தேதி மதியம், குடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி மொழியில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களை கருப்பு மை கொண்டு 25 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அழித்தனர்.
இந்த இளைஞர்களுக்கு தலைமை தாங்கிய திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கான செயலாளர் பிரகாஷ் கூறும்போது, நான் சார்ந்த கட்சியின் சார்பில் இது நடைபெறவில்லை. இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ் மீது பற்றுக்கொண்ட இளைஞர்கள், மாணவர்கள் இணைந்து வந்து இந்த இந்தி திணிப்பை எதிர்த்து அழித்தோம் என்றார்.
இந்த விவகாரத்தை அறிந்த குடியாத்தம் நகர போலிஸார் சம்பவயிடத்துக்கு வந்து இந்தி எழுத்துக்களை அழித்துக்கொண்டுயிருந்த இளைஞர்களிடம் விசாரணை நடத்தினர். அதன்பின் மேல் அதிகாரிகளின் உத்தரவுப்படி, அந்த இளைஞர்களை கைது செய்து ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இன்று மாலை 6 மணிக்கு பின் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து சொந்த பிணையில் வெளியில் அனுப்பிவைத்தனர்.
இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்ட இளைஞர்களில் 5 பேர் காவி வேட்டியும், காவி சட்டை, துண்டு அணிந்துயிருந்தனர், சிலர் கடவுளுக்காக மாலையும் அணிந்துயிருந்தது பொதுமக்களை கவர்ந்தது.