கடந்த வருடம் அக்டோபர் 19 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவிற்குத் தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், கடந்த மார்ச் 6 ஆம் தேதி தமிழ்நாடு அரசுக்கு மீண்டும் ஆளுநர் அனுப்பி வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் இந்தத் தடைச் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப் பேரவையில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு அடுத்த நாளே ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தன.
இதையடுத்து, தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி ஒப்புதல் அளித்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்ட சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்தது. இந்தத் தடைச் சட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி 69 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை உறுப்பினர்களாக கொண்ட அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது.
இது தொடர்பான வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா, நீதிபதி பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட முதல் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல்ரோத்தகி வாதிட்டார். அதில் அவர், "ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. ஆன்லைனின் ரம்மி விளையாடுவதை திறமைக்கான விளையாட்டு என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதன் பிறகும், இந்த விளையாட்டை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டு என்று கருத முடியாது. எனவே, தமிழ்நாடு கொண்டு வந்த இந்த சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.
அதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி வாதிட்டார். இரு தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று (09-11-23) வெளியிட்டனர். அதில் கூறியிருப்பதாவது, “தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சூதாட்ட தடைச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பு கோரிக்கை வைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அதிர்ஷ்டத்துக்கான ஆன்லைன் விளையாட்டுக்களைத் தடை செய்து தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டம் செல்லும்.
ஆனால், அதே நேரத்தில் திறமைக்கான விளையாட்டுக்களான ரம்மி, போக்கர் ஆகிய விளையாட்டுக்களை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டு எனக் கூறி தடை செய்து தமிழக அரசு இயற்றியுள்ள சட்டம் செல்லாது. அதனால், அந்த சட்டப் பிரிவுகளை ரத்து செய்கிறோம். ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுக்களை விளையாடுவதற்கான வயது, நேரம் ஆகியவற்றை முறைப்படுத்துவதற்குத் தமிழக அரசு புதிதாக விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம்” என்று கூறி தீர்ப்பளித்தனர்.