Skip to main content

சிலை கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

Published on 02/08/2017 | Edited on 02/08/2017
சிலை கடத்தல் வழக்குகளை
 பொன்.மாணிக்கவேல் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான அனைத்தும் வழக்குகளையும் சிறப்பு அதிகாரியாக ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

அருப்புகோட்டை அருகே உள்ள ஆலடிப்பட்டி கிராமத்தில் அரோக்கியராஜ் என்பவரின் வீட்டில் அஸ்திவாரம் பணியின் போது 6 சிலைகள் கிடைத்துள்ளது. இதனை கைப்பற்றிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஆய்வாளர் காதர் பாட்ஷா மற்றும் தலைமை காவலர் சுப்புராஜ் ஆகியோர் அந்த சிலைகளை கணக்கில் காட்டாமல் 6 கோடி ரூபாய்க்கு சிலைகளை விற்றுள்ளனர்.

இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவலர் ஒருவரின் கடிதத்தின் அடிப்படையில்  வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் இந்த சிலை கடத்தல் தொடர்பாக  காவல் துறை அதிகாரிகள் காதர் பாட்ஷா, சுப்புராஜ் ஆகியோர் மீதான விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றவும்  வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மனுவில் கோரியிருந்தார்.

இதை விசாரித்த நீதிபதி மகாதேவன், தமிழகத்தில் உள்ள சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு அதிகாரியாக ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை நியமித்து கடந்த 21/07/2017 உத்தரவு பிறப்பித்தார். மேலும் சிலை கடத்தல் தொடர்பாக வேறு நீதிமன்றங்களில்  உள்ள அனைத்து வழக்குகளையும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றி தினம் தோறும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை தெளிவுபடுத்தக்கோரி தமிழக அரசு சார்பில் விளக்கம் கோரப்பட்டது.  இந்நிலையில், இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீநிபதி மகாதேவன் தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உள்ளார். அங்கிருந்து காணொலி காட்சி மூலமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்தார் .
அப்போது தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் புதிதாக பதிவு செய்யப்படும் அனைத்தும் வழக்குகளையும் சிறப்பு அதிகாரியாக ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும் என தெளிவுபடுத்தினார். 

மேலும் சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களையும் அனைத்து ஆதாரங்களையும் சிலை கடத்தல்  தடுப்பு சிறப்பு அதிகாரிக்கு கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதி கூறினார். 

மேலும் நீதிபதி மகாதேவன், பொன்.மாணிக்கவேல் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்ற உத்தரவு என்ன ஆனது என கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு தரப்பில் 1 வாரத்தில் குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

மேலும், பசுபதீஷ்வரர் கோவில் சிலை கடத்தல் தொடர்பாக  இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன், உதவி ஆணையர் ஞானசேகரன் ஆகிய அதிகாரிகள் மீது 26/07/17 
வழக்கு பதிவு  செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

அப்போது நீதிபதி, நாட்டின் பொக்கிஷமான சிலைகளை கடத்தியவர்கள் யாராக இருப்பினும் உரிய பதிலளித்தே தீர வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் வழக்கு விசாரணையின் போக்கை கண்காணித்து, அது தொடர்பாக அவ்வப்போது  நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கும் என நீதிபதி தெரிவித்தார். இதனையடுத்து வழக்கின் விசாரணையை அகஸ்ட் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


- சி.ஜீவா பாரதி

சார்ந்த செய்திகள்