10, 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக் கண்ணன், “கடந்த 24 மணி நேரத்தில் 21 இடங்களில் மழைப் பதிவாகியுள்ளது. அடுத்த மூன்று தினங்களில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும். கனமழையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்குள் கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை அல்லது மிகக் கனமழை பெய்யக்கூடும். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்” எனக் கூறி இருந்தார்.
இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், திண்டுக்கல், அரியலூர், நீலகிரி, திருச்சி, தர்மபுரி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், கோயம்புத்தூர், தேனி, திருவண்ணாமலை, கரூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் உத்தரவிட்டதை அடுத்து அம்மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர்.