எச்.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தனியரச, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளனர்.
தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ., முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ., மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா அவர்கள் சமீபகாலமாக சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசி வருவதை தமிழ்நாட்டு மக்கள் சிறிதும் விரும்பவில்லை.
தமிழின பற்றாளர்களையும், திராவிட சிந்தனையாளர்களையும், சிறுபான்மையின மக்களையும் அவர் தொடர்ந்து இழிவு படுத்தி வருகிறார். இப்போது திரிபுராவில் லெனின் சிலை தகர்க்கப்பட்டதை வரவேற்று, அதேபோல் தமிழகத்தில் பெரியார் சிலையையும் தகர்ப்போம் என கருத்து கூறியிருப்பது தமிழகத்தில் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது.
திரிபுராவில் லெனின் சிலைகளும், திருப்பத்தூரில் பெரியார் சிலையும் தற்போது மீரட்டில் அம்பேத்கர் சிலையும் சேதப்படுத்தி இருப்பது நாடெங்கிலும் அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது. இவை அனைத்திற்கும் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களே பொறுப்பாகும். இவை அனைத்தையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
லெனின் ஏழைகளின் குரலாக உலகமெங்கும் ஒலிப்பவர். அம்பேத்கர் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிப்பவர், தந்தை பெரியார் அவர்கள் சமூக நீதியின் குரலாக ஒலிப்பவர். இதை எச்.ராஜா போன்றவர்கள் உணர வேண்டும். கடும் எதிர்ப்பை தொடர்ந்து, தனக்கு தெரியாமல் தனது "அட்மின்" அக்கருத்தை பதிவிட்டிருப்பதாக சொல்வது நம்பும் படியாக இல்லை.
மேலும், இவ்விஷயத்தில் சம்பந்தமே இல்லாமல் பசும்பொன் தேவர் ஜயா அவர்களை முன்னிருத்தி, எச்.ராஜா தப்பிக்க முயல்வதையும் வன்மையாக கண்டிக்கிறோம். பசும்பொன் தேவர் ஐயா ஆன்மீக வாதியாகவும், மத நல்லிணக்க வாதியாகவும் திகழ்ந்தவர், வன்முறைகளுக்கு எதிரானவர், அவர் ஒரு ஜனநாயக வாதி என்பதை எச்.ராஜா போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எச்.ராஜா தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருவதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். பெரியார் மீது அன்பு கொண்ட தமிழக மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.