Skip to main content

சட்டமன்றத்துக்குள் குட்கா விவகாரம்! திமுக எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு!

Published on 15/08/2020 | Edited on 15/08/2020
kutka;highcourt

சட்டமன்றத்துக்கு குட்கா எடுத்து வந்தது தொடர்பாக அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை,  தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

சட்டமன்றத்துக்கு குட்கா கொண்டு வந்த விவகாரம் தொடர்பான உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்து, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்குகள், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான அமர்வில் மூன்றாவது நாளாக இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது, உரிமைக் குழு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சோமையாஜி, குட்கா பொருட்கள் உற்பத்தி, விநியோகம், விற்பனைக்குத்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது.  தடை செய்யப்பட்ட குட்கா விற்கப்படுவதாகக் கூறி,  அதை சபையில் காட்டியதாக திமுக வாதிட்டுள்ளது. அது,  தடை செய்யப்பட்ட பொருள் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதனால், தடை செய்யப்பட்ட பொருளை வாங்கி, சபையில் காட்டியது உரிமை மீறலா இல்லையா என்பதைத்தான் பார்க்க வேண்டும். சபையின் கண்ணியத்தைக் காக்கவே உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.

இந்த வாதங்களுக்குப் பதிலளித்து திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், அமித் ஆனந்த் திவாரி மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் வாதிடுகையில், ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான புகார் மீது நடவடிக்கை எடுக்காத சபாநாயகரால், தி.மு.க மீது மட்டும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சபாநாயகரின் அனுமதி பெற்றே ஸ்டாலின், குட்கா விவகாரத்தை எழுப்பினார்.  மானியக் கோரிக்கை நடவடிக்கைகளில் அவர் குறுக்கீடு செய்யவில்லை.

2017 மார்ச் முதல்,  பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது குறித்த கோரிக்கை நிலுவையில் இருக்கிறது.  2017 பிப்ரவரி 18-ம் தேதியே,  11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும்.  தற்போதும் பெரும்பான்மை உள்ளதாகக் கூறுவது தவறு என,  திமுக எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்த நீதிபதிகள், சட்டமன்றத்தில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரிய வழக்குகள் மீதான விசாரணையை செப்டம்பர் 22-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்