புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறையுடன் செயல்பட்டு தொடர்ந்து சாதித்து வரும் விவசாயிகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்படுகிறது. அதன்படி 2023ஆம் ஆண்டிற்கான ‘பசுமை முதன்மையாளர் விருது’ கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த சமவெளியில் மிளகு சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்டலாம் என்பதை சாதித்துக் காட்டிய செந்தமிழ்செல்வன் மற்றும் நீர்நிலை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகளில் செயல்பட்ட மரம் தங்க. கண்ணன் ஆகிய ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரு விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விருதுகளை கீரமங்கலத்தில் நடந்த விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் விருதுகளை வழங்கி பரிசுத் தொகை ரூ.1 லட்சத்திற்கான காசோலைகளையும் வழங்கினார். விழாவில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், கீரமங்கலம் பேரூராட்சி தலைவர் சிவக்குமார், வார்டு கவுன்சிலர் கண்ணன் கவுன்சிலர்கள் உள்பட சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
அமைச்சரிடம் பசுமை முதன்மையாளர் விருது பெற்ற சமவெளி மிளகு சாகுபடி விவசாயி தமிழ்செல்வன் கூறும் போது, “பசுமை முதன்மையாளர் விருதுடன் ரூ.1 லட்சம் பரிசுத் தொகைக்கான காசோலையும் கொடுத்துள்ளனர். இதற்காக அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், சமவெளி மிளகு சாகுபடியை ஊக்கப்படுத்தும் விதமாக இனி வரும் காலங்களில் அதிக அளவில் மிளகு நாற்று பயிரிட்டு அதிக மகசூல் கொடுக்கும் 3 விவசாயிகளுக்கு எனக்குக் கிடைத்துள்ள பரிசுத் தொகையைப் பிரித்து ஊக்கப் பரிசாக வழங்க இருக்கிறேன்” என்றார்.