சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தீபாவளி என்றாலே பல நாட்களுக்கு பட்டாசு சத்தம் கேட்டும். தீபாவளி நாளில் விடியவிடிய வெடிவெடித்துவிட்டு காலையில் புத்தாடை அணிந்து புதுப்படத்திற்கு டிக்கெட் வாங்க வியர்க்க விருவிருக்க நின்று முதல்காட்சியை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து கறி சோறு தின்ற காலம் எல்லாம் மாறிப் போனது.
இன்றைய இளைஞர்களே இதையெல்லாம் மறந்து வரும் நிலையில் பட்டாசு வெடிக்க நேரம் (குறுக்கியது) குறித்தது நீதின்றம். கொஞ்ச நஞ்ச பட்டாசு சத்தத்திற்கும் தடை. இது ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம் இன்றைய இளைஞர்கள் இயற்கையை காக்க வேண்டும் விவசாயம் காக்க வேண்டும் பாரம்பரியம் காக்க வேண்டும் என்று சாப்ட்வேர் எஞ்சினியரும் படையெடுக்கத் தொடங்கியதால் இன்று பல ஊர்களில் ஏரி குளங்கள் சொந்த செலவில் தூர் வாரப்பட்டுள்ளது.
மழை பெய்தால் நீர்நிலைகள் நிரம்பும். ஆனால் காடுகளாக இருந்த நிலப்பரப்பு இன்று அழிக்கப்பட்டு வீடுகளும் தொழிற்சாலைகளும் உருவாகிவிட்டது.
மீண்டும் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்று அதற்கும் இளைஞர் படை கிளம்பிவிட்டது. ஒவ்வொரு கிராமத்தில் பனை விதை நடுவதும் நீண்ட நாட்கள் வளரும் பலன் தரும் மரக்கன்றுகளை நடவு செய்து வளர்ப்பதும் இவர்கள் பணியில் ஒரு பகுதியாக ஒதுக்கிச் செய்கிறார்கள். இப்படி வறட்சியை பார்த்து டெல்டாவில் உருவானது தான் கீரீன் நீடா என்ற அமைப்பு.
மரம் வளர்ப்போம்.. மழை பெறுவோம்.. வளம் பெறுவோம் என்பதே இந்த அமைப்பின் நோக்கமாக கொண்டுள்ளது. தங்கள் சம்பளத்தில் கொஞ்சம் செலவு செய்து மரக்கன்றுகளை நட்டால் போதும் நம் சந்ததிக்கு மழை கிடைக்கும் இப்ப தூர்வாரிய ஆறு ஏரி குளம் குட்டைகள் நிரம்பும் விவசாயம் செழிக்கும் நாடும் முன்னேறும் என்று புறப்பட்டு விட்டார்கள் மரக்கன்றுகளுடன். காலி இடங்கள் எங்கிருந்தாலும் மரக்கன்றுகளுடன் வந்து நிற்கிறார்கள் கிரீன் நீடா இளைஞர்கள்..
தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் துணிக்கடைகளில் வரிசையாக நிற்காமல் இன்று நீடாமங்கலம் பாலாஜி நகர் பசுமை பூங்காவில் வரிசையாக நின்றார்கள். அவர்கள் கைகளில் மரக்கன்றுகள் அவர்களுடன் கலாம் மாணவர் விழிப்புணர்வு இயக்கமும் இணைந்து கொண்டது.
கிரீன் நீடா ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு தலைமையில் கூடிய கலாம் மாணவர் விழிப்புணர்வு இயக்க துணைத் தலைவர் நீடா ரியாஸ் உள்பட இரு அமைப்புகளின் உறுப்பினர்களும்.. பட்டாசு இன்றி மரக்கன்றுகளுடன் பசுமை தீபாவளியை கொண்டாடி 100 மரக்கன்றுகளை நட்டார்கள். இதே போல இன்னும் பல ஆயிரம் மரக்கன்றுகளை நட கல்லூரி பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருவதுடன் விதை பென்சி்களையும் உருவாக்கி மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம். சில ஆண்டுகளில் லட்சம் மரக்கன்றுகளை வளர்ப்பதே எங்கள் லட்சியம் என்கிறார் கிரீன் நீடா ராஜவேலு
இளைஞர்களின் ஆசைகள் நிறைவேற வாழ்த்துகள். எல்லாருமே பசுமை தீபாவளி கொண்டாடினால் அழிந்த வனங்களை மீட்க முடியும்.