தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் தாலுகாவிற்குட்பட்ட கீழநீலிதநல்லூர் பகுதியின் தோணூகால் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாரியப்பன். இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு ரமேஷ், மாரிமுத்து என்ற இரு மகன்களும் மல்லிகா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் மாரிமுத்து என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மணிமாலா என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடந்திருக்கிறது. இத்தம்பதியருக்கு ஹரிவர்ஷன் (2) என்ற ஆண் குழந்தை உள்ளது. குடும்பத்தில் முதல் பேரக் குழந்தை என்பதால் மாரியப்பன் தனது பேரன் ஹரிவர்ஷனுடன் எப்போதும் பாசமாகவே இருப்பார்.
மாரியப்பன் வெளியே சென்று வரும்போதெல்லாம் பேரனை பிரியமுடன் உடன் அழைத்து சென்று வருவது வழக்கம். அந்த பாசத்தில் மாரியப்பன் நேற்றைய தினம் தனது தோட்டத்தில் களையெடுக்கும் பணிகளைச் சரிபார்க்கச் சென்றபோது பேரன் ஹரிவர்ஷனை உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது மாரியப்பனுக்குத் தாகம் எடுத்திருக்கிறது. தனது பேரன் ஹரிவர்ஷனை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு தண்ணீர் குடிப்பதற்காக தன்னுடைய வயலின் கிணற்றை நோக்கி நடந்திருக்கிறார். அந்தக் கிணறு சுற்றுச் சுவர் இல்லாமல் தரையோடு தரையாக அமைந்திருந்தது. அந்த சமயம் தண்ணீர் குடிக்கச் சென்ற மாரியப்பனுக்குத் திடீரென்று கால் இடற, பேரனுடன் கிணற்றுக்குள் விழுந்திருக்கிறார்.
தண்ணீரில் மூழ்கிய தாத்தாவும் பேரனும் சம்பவ இடத்தியே உயிர் இழந்திருக்கின்றனர். வயலில் வேலை செய்தவர்கள் கூச்சலிட்டிருக்கின்றனர். தகவலறிந்து ஸ்பாட்டுக்கு விரைந்து வந்த சிறுவனின் தந்தை மாரிமுத்துவும் மற்றும் அங்குள்ளவர்களும் கிணற்றிலிருந்து தாத்தா பேரன் இருவர்களையும் மீட்டிருக்கின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பனவடலிச்சத்திரம் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்திவருகிறார். தாத்தா பேரன் பலியான சம்பவம் அந்தப் பகுதியைச் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.