மாநில சுயாட்சிக்கு விரோதமாக ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆளுநருக்கு திமுக - விசிக கருப்பு கொடி!
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திற்கு நேற்று வந்த தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித் நேற்று இரவு கடலூர் விருந்தினர் மாளிகையில் தங்கினார். இன்று காலை கடலூரில் வண்டிப்பாளையம், அம்பேத்கர் நகர், விக்னேஷ்வரா நகர் ஆகிய பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் தூய்மை பணிகளில் ஈடுபட்டார். பின்னர் கடலூர் - புதுச்சேரி சாலை வழியாக மீண்டும் விருந்தினர் மாளிகை சென்றார்.
முன்னதாக ஆய்வு என்ற பெயரில் ஆளுநர் மாநில சுயாட்சி கொள்கைக்கு விரோதமாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களை துஷ் பிரயோகப்படுத்தும் விதமாகவும், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செயல்படுவதாக கூறி தி.மு.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தி.மு.க கடலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் மஞ்சக்குப்பம் அஞ்சலகம் அருகே கூடினர்.
ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநிலங்களின் அதிகார உரிமையில் தலையிடும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும், தமிழ்நாடு அரசின் கையாலாகதனத்திற்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் அருகிலுள்ள தி.மு.க அலுவலகம் முன்பாக அவர்கள் குழுமியிருந்த போது அவ்வழியே ஆளுநரின் வாகனமும், பாதுகாப்பு வாகனங்களும் வரவே கருப்பு கொடி காட்டி கண்டன முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் உழவர் சந்தை அருகே ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மணிவாசகம் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சுந்தரபாண்டியன்