கடந்த ஞாயிறு அன்று (18-02-2018) மே 17 இயக்கம் நடத்திய 'வெல்லும் தமிழீழம்' மாநாட்டில் கலந்து கொண்ட இயக்குனர் கரு.பழனியப்பன், தமிழீழ கொள்கை கொண்ட இயக்கங்கள் அனைத்தும் இங்கு கூடியிருக்கையில், அதற்காகவே எப்பொழுதும் கத்திக்கொண்டு இருக்கும் சீமானை நீங்கள் ஏன் சேர்த்துக் கொள்ளவில்லை என்று கேட்டார். அவர் பேசியது...
உங்கள் எல்லோருக்கும் நினைவிருக்கா என்று தெரியவில்லை. 2006ஆம் ஆண்டு எஸ்.வி.சேகர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அப்போது பெரியார் திரைப்படத்திற்காக தமிழக அரசு 95 லட்சம் நிதி அளித்தது. எஸ்.வி.சேகர் அதனை எதிர்த்து, அவருக்காக நிதி தருவீர்கள் என்றால் சங்கராச்சாரியாரை பற்றி திரைப்படம் எடுத்தாலும் தமிழக அரசு நிதி தருமா என்று கேள்வி எழுப்பினார். அவர் எழுப்பிய கேள்விக்கு திருச்சியில் ஒரு மேடையில் நந்தலாலா என்கிற கவிஞர் ஒருவர், 'கண்டிப்பாக நிதி அளிக்கமாட்டோம். 'A' படம் எடுப்பதற்கெல்லாம் அரசாங்கம் பணம் கொடுக்காது' என்றார். ஏன் இன்றும் இவர்கள் பெரியாரை பார்த்து கத்துகிறார்கள் என்றால் அவர்தான் முதலில் 'இங்கு ஜாதிகள் இல்லை, நீங்கள் எல்லோரும் தமிழர்கள்' என்று முழக்கமிட்டார்.
திருமுருகன் காந்தியை சிறையில் அடைத்த போது, நான் ஒரு ட்வீட் செய்தேன். அது என்னவென்றால், 'உங்களுக்கு ஜீ , எங்களுக்கு திரு. உங்களுக்கு இராமன், எங்களுக்கு முருகன். உங்களுக்கு கோட்சே, எங்களுக்கு காந்தி'. மனம் சொல்லியதை கேட்டு இதை செய்துவிட்டேன். பிறகு புத்தி விழித்து யோசித்தேன் ஒருவேளை தவறாக செய்துவிட்டோமோ என்று. ஆனால், கடைசியாக என்னை வந்து எதிர்த்தவன் எல்லாம் பாஜக க்காரன் தான். அப்போதான் எனக்கு நிம்மதியாக இருந்தது நான் செய்ததில் தவறில்லை என்று. நான் எப்போதும் தன்னை எதிர்கின்றவன் தப்பானவனாக இருந்தால், நான் செய்தது சரி என்று நம்புவேன்.
தமிழ்நாட்டில் தமிழனாய் இருப்பதற்கும் தமிழ் பேசாமல் இருப்பதற்கு காரணம் தமிழர்கள் அல்ல, ஹிந்தி பேசு என்று சொல்பவன்தான் காரணமாக இருக்க போகிறான். திரையரங்குகளில் இனிமேல் தேசியகீதம் போடக்கூடாது அதற்கு பதிலாக தமிழ்த்தாய் வாழ்த்தைத்தான் போடவேண்டும் அப்போதுதான் யார் யார் எல்லாம் எழுந்து நிற்பார்கள் என்பது தெரியவரும் போல. தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மாட்டாராம். அவர்கள் எதற்கு இங்கு இருக்க வேண்டும். நாம் முதலில் பூட்டவேண்டியது சங்கரமடத்தைத் தான்.
அதனைத்தொடர்ந்து இந்த அழைப்பிதழ் கொடுக்கப்பட்டபோது யார் யாரெல்லாம் கலந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை பார்த்தேன். அதில் எல்லோரும் தமிழ் சார்ந்த இயக்கங்களும் திராவிடம் சார்ந்ததுமாகவே இருந்தன. இவர்கள் அனைவரும் சாதிய மறுப்பாளர்கள், தமிழுக்காக போராடுபவர்கள் எல்லாவிதத்திலேயும் ஒன்றுபடும் இவர்கள் ஏன் ஒரே புள்ளியில் இருந்து ஒன்றாக செயல்பட மாட்டேன்கிறார்கள்? சும்மா இருக்கின்ற எனக்கே இவ்வளவு யோசனைகள் வரும்போது, இதுவே வேலையாக இருக்கும் இவர்களுக்கு ஏன் வருவதில்லை? இதையெல்லாம் பார்க்கும்போது, எப்போதுமே ஈழ விடுதலைக்காகவே கத்திக் கொண்டிருக்கும் சீமான் ஏன் உங்களுடன் சேரமாட்டேன்கிறார்? அவர் சேர மறுக்கிறாரா, இல்லை நீங்கள் சேர்க்க மறுக்கிறீர்களா? நான் ஒரு சாதாரண பள்ளி மாணவனை போன்றவன்தான். ஒரு சந்தேகமாகத்தான் இதை கேட்கிறேன். இது ஒற்றை குரலாக இருக்கவேண்டும், அதுவும் வலுவான குரலாக... அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.