Skip to main content

கஞ்சித் தொட்டி திறந்த நெசவாளர்கள்! -அரசிற்கு ஐ.பெரியசாமி எச்சரிக்கை!!

Published on 12/06/2020 | Edited on 12/06/2020
Government should abandon the trend of cheating weavers!-i periyasamy


திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியிலுள்ள சின்னாளபட்டி பகுதியில் வசிக்கும் நெசவாளர்களுக்கு பாவு மற்றும் நூல்களை, கூட்டுறவு நெசவாளர்கள் சங்கம் வழங்காததை கண்டித்து கடந்த ஒருவாரமாக கஞ்சித் தொட்டியில் கஞ்சி காய்ச்சி நெசவாளர்கள் குடித்து வருகிறார்கள். அப்படி இருந்தும் மாவட்ட நிர்வாகம் அதை கண்டுகொள்ளவில்லை.


இந்தநிலையில் ஆத்தூர் தொகுதி திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி தனது தொகுதியில் உள்ள நெசவாளர்களின் நலன் கருதி அரசை எச்சரித்து அறிக்கை விட்டிருக்கிறார். அதில்,

பாரம்பரிய தொழிலாக திகழும் கைத்தறியின் அடையாளமான சின்னாளபட்டியில் சுமார் 4,200க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் தற்போது வேலைவாய்ப்பின்றி, வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடி வருகின்றனர். இங்கு 8 நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட உறுப்பினர்கள் சுமார் 1,800 பேரும், உறுப்பினரல்லாத 2,400 பேர்கள் கரோனா பேரிடர் ஊரடங்கில் அரசு முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால் வேலை வாய்ப்பை இழந்துள்ளார்கள்.

 

 


கரோனாவிற்கு முன்னர் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நெசவாளர்களுக்கு வழங்கிய பட்டுநூல் மற்றும் பாவுகளுக்கு உரிய சேலை நெய்தும் இன்னமும் கூலிப் பணங்களை இன்னமும் பட்டுவாடா செய்யவில்லை. தற்போது தொழில் உற்பத்தி புரிவோருக்கான தளர்வு சுமார் 10 நாட்கள் கடந்த நிலையில், இதுவரை புதிதாக நெசவாளர்களுக்கு சேலை நெய்ய நூல், பாவுகளை வழங்க கூட்டுறவு சங்கங்கள் முன் வரவில்லை. ஆக மொத்தம் 65 நாட்களில் நெசவாளர்கள் எந்தவித வருமானம் இல்லாமல் வாடி வருகின்றனர். மேலும் தறி ஒன்றுக்கு தலா ரூ.10,000 மற்றும் நெசவாளர் பிரதிநிதிகளுக்கு ரூ. 5000  நிவாரணம் வேண்டி பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும்கூட கொடுக்கவில்லை. ஆனால் அரசு தரப்பில் நிவாரணம் ரூ 2000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு பத்திரிகைகளில் மட்டுமே வந்ததே தவிர இதுவரை எந்த ஒரு நெசவாளருக்கும் நிவாரணம் சென்று சேரவில்லை.

 

 

Government should abandon the trend of cheating weavers!-i periyasamy

 

இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் தனியார் மாஸ்டர் வீவர்களின் ஏஜண்ட்கள்  நூல்-பாவுகளை நெசவாளர்களுக்கு வழங்கி வறுமையை பயன்படுத்தி குறைந்த கூலிக்கு வேலை வாங்கும் அடிமைப்போக்கினை அமுல்படுத்தி வருகிறது. இதனை அரசும், கூட்டுறவு சங்கங்கங்களும்,  கண்டு கொள்ளாதிருப்பது ஈவு இரக்கமற்ற செயல்.

நடைமுறையில் உள்ள கூலியில் சுமார் 15 % முதல் 20% வரை கூலியானது குறைக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. வேலை கொடு இல்லையேல் சோறு கொடு என்ற வறுமை ஓலங்கள் அரசின் செவிக்கு இன்னும் கேட்கவில்லையோ? கடந்த 4 நாட்களுக்கு முன்னர், அஞ்சுகம் காலனியில் நெசவாளர்கள் "கஞ்சித் தொட்டி" திறக்கப்பட்ட அவல நிலையும் அதன்பின்னர் தொடர்ந்து அண்ணா நகர் பகுதி நெசவாளர்கள் "கஞ்சித் தொட்டி" திறக்கப்பட உள்ளதையறிந்து வட்டாட்சியர் கைத்தறி துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சென்று தடுத்து நிறுத்திய செய்தி பத்திரிகைகளில் வெளியானது கூட அரசின் கண்களுக்கு தெரியவில்லையோ?


 

nakkheeran app




ஆகவே தமிழக அரசு, வாழ்வாதாரம் நொடிந்த நிலையில் வாடிவரும் நெசவாளர்களுக்கான வேலைவாய்ப்பினை உடனடியாக வழங்கி, உரிய கூலி கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், காலம் தாழ்த்தும் பட்சத்தில் அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டத்தில் இறங்கும். அதுமட்டுமின்றி,  நேரடியாக நெசவாளர் பிரதிநிதிகளுக்கு முறையாக நூல்-பாவுகளை வழங்காமல், தனியார் ஏஜண்ட்களின் பிரதிநிதிகளுக்கு மறைமுக ஒப்பந்தமாக வேலையினை வழங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அதிகாரிகள்  மீது விசாரணை நடத்திட வேண்டும் எனவும் அரசை வலியுறுத்துகிறேன் என  தனது அதில் தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்