தமிழக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்! அன்புமணி கடும் கண்டனம்!

இது தொடர்பாக அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த தொழிலதிபர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். மருத்துவத் துறையில் முன்னேறிய மாநிலம் என்று கூறிக்கொள்ளும் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் இருவர் உயிரிழந்ததற்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.
ஆம்பூரை அடுத்த பச்சக்குப்பம் என்ற இடத்தில் நேற்று பிற்பகல் நிகழ்ந்த சாலைவிபத்தில் காயமடைந்த சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜ்குமார் படுகாயங்களுடன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவத்திற்காக சேர்க்கப்பட்டார். அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்ட போதிலும் மருத்துவம் அளிக்க மருத்துவர்கள் எவரும் இல்லாததால் 2 மணி நேரத்திற்கும் மேலாக உயிருக்குப் போராடிய அவர் இறுதியில் உயிரிழந்தார். அதேவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது நண்பர் சந்தானத்திற்கும் மருத்துவம் அளிக்கப்படாததால் அவரது உடல்நிலையும் மோசமடைந்தது. அவரை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவசர் ஊர்தி கூட இல்லாத நிலையில், தனியார் அவசர ஊர்தி மூலம் அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், ஆம்பூரையடுத்த ரால்லகொத்தூரைச் சேர்ந்த வைஷ்ணவி என்ற 13 வயது சிறுமி மூச்சுத் திணறல் காரணமாக ஆம்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பிற்பகல் 1.15 மணிக்கு மணிக்கு சேர்க்கப்பட்ட அவருக்கு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்படாத நிலையில், 3.30 மணிக்கு ஒரு மருத்துவர் வந்து சிகிச்சை அளித்துள்ளார். ஆனால், உரிய நேரத்தில் மருத்துவம் அளிக்கப்படாததால் அந்த சிறுமி உயிரிழந்து விட்டார். இறந்த சிறுமியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அமரர் ஊர்தி இல்லாததால் இரு சக்கர ஊர்தியில் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு பூட்டி போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.
ஆம்பூர் மருத்துவமனை வட்டார மருத்துவமனை ஆகும். அங்கு பல துறை வல்லுனர்கள் உட்பட 10 மருத்துவர்கள் பணியில் இருந்திருக்க வேண்டும். ஆனால், நேற்று ஒரு மருத்துவர் கூட இல்லாதது கண்டிக்கத்தக்கதாகும். மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த மக்களை மருத்துவர்கள் இல்லை என்று கூறி மருத்துவமனை ஊழியர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர். கரு கலைந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான சூழலில் வந்த பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு கூட மருத்துவர்கள் இல்லை. அவசர ஊர்தி கூட இல்லாத நிலையில் அவர் தானி மூலம் குடியாத்தம் மருத்துவமனைக்கு சென்றார்.
மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை, உடலை கொண்டு செல்ல அமரர் ஊர்தி இல்லாததால் மிதி வண்டியிலும், தலையிலும் உடலை தூக்கிச் சென்ற கொடுமை போன்றவை வட மாநிலங்களில் மட்டும் தான் இதுவரை நடந்துள்ளன. ஆனால், தமிழகத்திலும், அதுவும் இரு மாநில தலைநகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத நிலைமை நிலவுவது அவமானப்பட வேண்டிய ஒன்றாகும். தமிழ்நாட்டில் சுகாதாரத்துறை முற்றிலுமாக செயலிழந்து விட்டதையே இது காட்டுகிறது. இந்த அவல நிலைக்கு ஆட்சியாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளை தரம் உயர்த்தி மக்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்குவதற்கான முயற்சிகளில் தான் ஆர்வம் காட்ட வேண்டும். ஆனால், தமிழகத்திலோ குட்கா விற்பனையிலும், வருமானவரித்துறை வழக்குகளில் இருந்து தம்மை தற்காத்துக் கொள்வதிலும் மட்டும் ஆர்வம் காட்டும் சுகாதாரத்துறை அமைச்சர் தான் வாய்த்திருக்கிறார்.
உத்தரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் இல்லாததால் 63 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் உலகம் முழுவதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆம்பூரில் மருத்துவர்கள் இல்லாததால் இருவர் உயிரிழந்ததும், பலருக்கு சிகிச்சையளிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதும் உத்தரப்பிரதேசத்தில் நடந்ததை விட அவலமானதாகும். இனியாவது இத்தகைய நிகழ்வுகள் நடக்காத வண்ணம் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம்பூர் நிகழ்வுகளுக்கு பொறுப்பேற்று சுகாதார அமைச்சர் பதவி விலக வேண்டும்.