சென்னை டி.எம்.எஸ்-ல் உள்ள உயரதிகாரியின் பெயரைச் சொல்லி அரசு பணிக்கு செல்லாமலே, பணியிடை மாறுதல் பெற்று வலம்வருகிறார் ஒரு பெண் பிசியோதெரபிஸ்ட். இது மருத்துவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்.ஆர்.பி தேர்வின் மூலமாக தேர்ச்சி பெற்று 2019ஆம் ஆண்டு குடியாத்தம் பகுதியில் பிசியோதெரபிஸ்ட் பணியில் சேர்ந்தவர் ரேணுகா. இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்த அவர், அங்கு ஒரே ஒரு நாள் மட்டுமே பணிபுரிந்துவிட்டு, தன்னுடைய சொந்த ஊரான கிருஷ்ணகிரிக்கே பணியை மாற்றிக்கொண்டு, பர்கூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார்.
பர்கூர் அரசு மருத்துவமனையில் பிசியோ தெரபிஸ்ட்டாக பணி புரிந்துவந்த ரேணுகா சரியாக பணிக்கு வராமலும், பணிபுரியாமலும் இருந்ததாலும் அப்பகுதி மக்களும், மருத்துவர்களும் பர்கூர் சட்டமன்ற எம்.எல்.ஏவான மதியழகனிடம் புகார் கொடுத்துள்ளனர். இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில், பர்கூர் சட்டமன்ற எம்.எல்.ஏ மதியழகன், கிருஷ்ணகிரி ஜே.டி. பரமசிவனிடம் இந்தக் குற்றச்சாட்டை தெரிவித்து விசாரிக்க சொல்லியுள்ளார். அதன் அடிப்படையில், ஜே.டி. ரேணுகாவை பணியிட மாற்றம் செய்துள்ளார்.
2022ம் ஆண்டு, ஜூலை 11ம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்ட ரேணுகா, வழக்கம் போலவே குடியாத்தம் மருத்துவமனையில் பத்து நாட்கள் மட்டும் பணிபுரிந்துள்ளார். பின்னர் மீண்டும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு போகு முடியாத காரணத்தால் கிருஷ்ணகிரி மாவட்டம், அருகில் உள்ள திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பணிமாறுதல் பெற்றுள்ளார். இந்த பணி மாறுதலுக்கு டி.எம்.எஸ் இயக்குநர் டாக்கடர் சம்சாத் மூலமாக நடந்ததாக சொல்லப்படுகிறது.
இவர் பணியில் அமர்த்துப்பட்டுள்ள திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட் பணியிடமும், பிசியோ செய்வதற்கான உபகரணங்களும் இல்லாமலே அங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். மேலும், இவர் குடியாத்தம் மருத்துவமனையில் இருந்து டெபிடேஷன் மூலமாக 3 மாதத்திற்கு வந்ததால், அங்கு அந்த இடத்தை காலியிடமாகவும் காட்டப்படவில்லையாம். இதனால், அங்கு வருகின்ற பொதுமக்களுக்கு பிசியோ செய்வதற்கு மருத்துவர்கள் இல்லாமல் கடும் சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இங்கும் பணிபுரியாமல் அங்கும் பணிபுரியாமல் அரசு சம்பளத்தை மட்டும் ரேணுகா மாதம் மாதம் பெற்றுவருவதால், அங்குள்ள மருத்துவர்களின் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து குடியாத்தம் ஜே.டியான மருத்துவர் கண்ணகியிடம் கேட்டபோது, “திருப்பத்தூருக்கு மூன்று மாதம் டெபிடேஷனில் சென்றுள்ளார். அவர் அங்கேதான் பணிபுரிகிறார். நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. மேலிடத்து ஆர்டர்களை நாங்கள் கேட்டுத்தான் ஆகவேண்டும்” என்றார்.
இது குறித்து பிசியோதெரபி ரேணுகாவை தொடர்புகொண்டு கேட்ட போது, “நான் தற்போது குடியாத்தத்தில் பணிபுரிந்து வருகிறேன். தற்போதும் அங்குதான் உள்ளேன்” என்றார்.
குடியாத்தம் ஜே.டி, ரேணுகா திருப்பத்தூரில் பணிபுரிகிறார் என்று சொல்வதும், ரேணுகா, தான் குடியாத்தத்தில் பணியில் இருப்பதாக சொல்வதும் முரணாக உள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறைச் செயலாளர் செந்தில் குமாரிடம் கேட்ட போது, “உடனடியாக விசாரித்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.