கரோனா வைரஸ் தொற்றினை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து தமிழ்நாட்டில் அரசு மதுபானக்கடைகள் கடந்த ஒன்றரை மாதமாக மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று அரசு மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அதேசமயம் ஏற்கனவே கரோனா அச்சத்திலும், ஊரடங்கினால் நிலவும் பொருளாதார நெருக்கடியிலும் மக்கள் அல்லல் படும் நேரத்தில் 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல்' மதுக்கடை திறப்பது என பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர்.
விருத்தாசலம் ஸ்டேட் பேங்க் அருகில் உள்ள மதுக்கடை முன்பாக மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் திடீர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது 'கரோனா தடை காலத்தில் சொல்ல முடியாத துன்பத்தில் மக்கள் உள்ள போது, எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றாதே.. மூடு டாஸ்மாக்கை!' என்ற முழுக்கத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடன் அங்கு விரைந்து வந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை கைது செய்து, அங்குள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து பின்பு மாலையில் விடுவித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருவேப்பிலங்குறிச்சி பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கரோனா பாதிப்பு காலத்தில், மதுக்கடைகளை திறக்க கூடாது. அவ்வாறு திறந்தால் கரோனா தொற்று அதிகளவில் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும், ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், தொற்று ஏற்பட்டுள்ளவர்களுக்கு முறையான சிகிச்சையை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன முழுக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயில்வே சந்திப்பு அருகே உள்ள மதுக்கடை திறந்தால் அருகில் குடியிருக்கும் மக்களுக்கு கரோனா பரவும் எனவும், பெண்களின் நிம்மதி குலையும் எனவும் கூறி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து பெண்களிடம் சமரசம் பேசிய அதிகாரிகள் கரோனா முடியும் வரை மதுக்கடை திறக்கப்படாது என உறுதியளித்ததையடுத்து கலைந்து சென்றனர்.
கடலூர் மாவட்டத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 350-ஐ தாண்டியுள்ள நிலையில் மதுக்கடை திறப்பது கரோனா தொற்றை அதிகரிக்கும் எனவும், மக்களின் நிம்மதி குலையும் எனவும் கூறி மணிமுத்தாறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் விருத்தாசலம் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பின்னர் அலுவலகம் முன்பாக "பெண்களின் தாலியை பறிக்காதே.... குடும்பங்களின் நிம்மதியை குலைக்காதே!!" என முழங்கி மாரடித்து எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.