மண்ணை மலடாக்கும் ஹைட்ரோ கார்பன், பெட்ரோலிய மண்டலமாக்கும் மத்திய அரசின் திட்டத்தை கைவிடு.. மாநில அரசே சமவெளியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்க மாட்டோம்.. என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்று.. காவிரி பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கு.. என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் காவிரிபடுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் கண்டன பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முற்றுகை, ஆட்சியர்களிடம் மனு கொடுக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது.

இதற்காக மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்காண விவசாயிகள் திரண்டு வந்திருந்தனர். தஞ்சையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திணறும் அளவில் விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை கல்லூரி மாணவர்கள் கல்லூரி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் மத்திய மாநில அரசுகளே விவசாயத்தை அழிக்காதே என்று தர்ணா போராட்டத்தில ஈடுபட்டதுடன் பலர் விவசாயிகளுடன் பேரணி, முற்றுகை போராட்டத்திலும் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலும் நெடுவாசல் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் இருந்து புதுக்கோட்டை அரசு பொது அலுவலகங்கள் வளாகத்தில் திரண்ட விவசாயிகள் முழக்கங்களுடன் சுமார் ஒரு கி. மீ. தூரத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்று மனு கொடுத்தனர்.