கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களுக்கான இரண்டாம் கட்ட உரிமைத் தொகை வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், ''தொண்டை வலி இருந்தாலும் தொண்டில் தொய்வு ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான் வந்திருக்கிறேன். உங்களை பார்க்கும் பொழுது என்னுடைய உடல் வலி குறைந்து மனது மகிழ்ச்சி அடைகிறது. இந்த ஆயிரம் ரூபாய் வாங்கும் போது உங்களுக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சியை விட கொடுக்கும் போது எனக்கு தான் அதிகமாக மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த மகிழ்ச்சியை விட சிறந்த மருந்து எதுவாக இருக்க முடியும். அதனால்தான் மருத்துவர்கள் அறிவுரையை மீறி இந்த விழாவிற்கு வந்துவிட்டேன்.
குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று தேர்தலுக்கும் முன்பு சொன்னபோது சிலர் சொன்னார்கள், இதெல்லாம் நிறைவேற்ற முடியாத வாக்குறுதி. இவர்கள் ஆட்சிக்கே வரவேமாட்டார்கள். இது மாதிரி ஒவ்வொருத்தரும் நிறைய சொன்னார்கள். ஆனால் நீங்கள் எல்லோரும் என்ன சொன்னீர்கள் என்றால் 'திமுகதான் ஆட்சிக்கு வரணும்; திமுக சொன்னா நிறைவேற்றும்; கலைஞர் மகன் ஸ்டாலின் தான் முதலமைச்சராக வரவேண்டும்' என்று ஓட்டு போட்டு பதிலடி தந்தீர்கள். உங்களுடைய கட்டளைக்கு கட்டுப்பட்டவன் நான். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொன்னால் சொன்னதை நிச்சயம் செய்வேன். அதற்கு அடையாளமாகத்தான் மாதந்தோறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கொடுத்துள்ளோம். அதனால் தான் உங்கள் முன்பு இவ்வளவு கம்பீரமாக நிற்கிறேன்.
கடந்த செப்டம்பர் 15 ஆம் நாள் அண்ணா பிறந்தநாளான காஞ்சிபுரத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தேன். செப்டம்பர் 15, அக்டோபர் 15 என இரண்டு மாதங்கள் 2000 ரூபாய் என ஒரு கோடியே 6 லட்சம் சகோதரிகள் வாங்கிட்டாங்க. இந்த முறை முன்கூட்டியே இன்று மாலைக்குள் அடுத்த ஆயிரம் ரூபாயும் உங்களுக்கு வந்து சேர்ந்துவிடும். மகளிர்க்கு சொத்துரிமை, கல்வி, வேலை வாய்ப்பு, உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு கொடுத்து உங்களுடைய உரிமைகளுக்காக பாதுகாவலராக இருந்தவர் கலைஞர். அவருடைய நூற்றாண்டு விழாவில் கொடுக்கப்படும் இந்த தொகையானது உதவித் தொகை அல்ல; உரிமை தொகை'' என்றார்.