தேர்தல்களில் 100 சதம் வாக்குப் பதிவு நடந்தாக வேண்டும் என்று கடும் போராட்டம் நடத்துகிறது தேர்தல் ஆணையம். மறு பக்கம் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் 100 சதம் வாக்குப் பதிவு செய்ய வேண்டும், என்று நோட்டீஸ்கள் மற்றும் பிரச்சாரம் மூலமாக பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர். நாடு முழுமையான தேர்தலுக்காக அரசு கோடிக் கணக்கில் பணத்தைச் செலவிட்டும் வருகிறது. தோராயமாகப் பார்த்தாலும், தமிழ்நாடு போன்றதொரு மாநிலத்திற்கு அரசு ரூ. 441 கோடி தேர்தலுக்காகச் செலவிடுகிறது என்கின்றனர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள்.
இதனிடையே தேர்தல் பணிக்காக பல மாநிலங்களில், குறிப்பாகத் தமிழிகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களே பல்லாயிரக்கணக்கில் பயன்படுத்தப்படுகின்றனர். பணி காரணமாக அவர்கள் வாக்குச் சாவடிக்குச் செல்ல முடியாத காரணத்தால் அவர்கள் தங்களின் வாக்குகளை விண்ணப்பம் மூலம் பதிவு செய்து அனுப்பிவிடுவர். அதற்கு ஏற்ப அவர்களுக்கான தபால் வாக்கு படிவமான 12 மற்றும் 12ஏ. படிவங்கள் வழங்கப்படுகின்றன.
இந்தப் படிவங்கள் அவர்கள் தேர்தல் பயிற்சிக்குச் செல்கிறபோது வழங்கப்படுவது நடைமுறை இந்த முறை தவிர, அவர்கள் வேறு வழிகளில் வாக்குப் பதிவு செய்ய முடியாது.
தற்போதைய மக்களவை தேர்தலுக்கான தபால் வாக்குப் படிவங்கள் நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பணி புரியம் அரசுப் பணியாளர்களில் சுமார் 2500க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு படிவம் வரவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
முன்பெல்லாம் தேர்தல் பணியிலிருக்கும் நாங்கள் வாக்குப்படிவம் கேட்டு விண்ணப்பிப்போம். உடனே வந்ததும் அவைகளைப் பூர்த்தி செய்து அனுப்பிவிடுவோம். தற்போது அதற்காக தொடர்புடைய தாலுகா அலுவலகங்களில் போய் கேட்டால், உரிய பதில் இல்லை. தாழையூத்து, சங்கர் நகர் கரையிருப்பு போன்ற ஏரியாக்களிலுள்ள அரசுப் பணியாளர்களுக்கு உரிய பாரம் கிடைக்கவில்லை என்கின்றனர் அரசுப் பணியாளர்கள் வட்டாரங்கள்.
நெல்லை மாவட்டத்தில் 14667 அரசுப் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் தபால் ஒட்டு பெறுவதற்கான கடைசி நாளான ஏப்ரல் 11 வரை, 12 ஆயிரத்து 30 பேர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர் மற்றவர்கள் விண்ணப்பிக்கவில்லை என்கிறார் மாவட்டக் கலெக்டர் ஷில்பா. அரசுத்துறை ஊழியர்களே வாக்குப் பதிவில் ஆர்வம் காட்டாத நிலையில் 100 சதம் வாக்குப் பதிவு சாத்தியமாகுமா என்பதே கேள்வியாக நிற்கிறது.