புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் புதிய நவீன சி டி ஸ்கேன் சென்டர் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் திறப்பு விழா வியாழக்கிழமை இரவு நடந்தது. மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், அறந்தாங்கி அதிமுக எம்எல்ஏ ரெத்தினசபாபதி, கந்தர்வகோட்டை அதிமுக எம்எல்ஏ ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அறந்தாங்கி மாவட்ட தலைமை மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள், பொதுமக்கள் செல்லும் சாலை எங்கும் அமைச்சர், ஆட்சியர், எம்எல்ஏ, சுகாதார அதிகாரிகள், திறப்பு விழா கண்ட கட்டிடம் போன்ற பதாகைகள் வைத்து வரவேற்பு அளித்திருந்தனர்.
திறப்பு விழாவில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும் போது, அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளின் பிரசவகால இறப்புகள் இல்லை என்பது பெருமையாக உள்ளது. மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில்தான் அதிகமான பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடக்கிறது. முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டமும் சிறப்பாக செயல்படுகிறது. மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் என் தோழர்கள். உங்களின் கோரிக்கை முதலமைச்சரிடம் பரிசீலனையில் உள்ளது இன்னும் ஒரு மாதத்தில் நல்ல செய்தி வரும் என்றார்.
தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில்.. கடந்த 2016 ம் ஆண்டு ஜெ முதல்வராக இருந்தபோது 110 விதியின் கீழ் அறந்தாங்கி தொகுதியில் நெற்குப்பம் ஊராட்சியில் அம்பலவானலேந்தல் கிராமத்தில் உள்ள கிராம சுகாதார வளாகத்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக அறிவித்தார். இன்று வரை அந்தப்பணி நடக்கவில்லை. ஆனால் கறம்பக்குடி ஒன்றியத்தில் பணி முடிந்து திறப்பு விழாவும் நடந்து விட்டதே? என்ற நமது கேள்விக்கு..
அருகில் நின்ற எம்எல்ஏ ரெத்தினசபாபதி இடம் தேர்வு நடக்கிறது என்றார்.
அமைச்சர் விஜயபாஸ்கர்.. தற்போது தான் கவனத்திற்கு கொண்டு வந்தீர்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
( அருகில் நின்ற சிலரோ.. ரெத்தினசபாபதி அமமுக பக்கம் போனதால் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இடம் அப்பவே தேர்வு செய்து கொடுத்தாச்சு. இப்ப மறுபடியும் அதிமுகவில் இணைந்துவிட்டதால் இனி பணிகள் தொடரலாம் என்றனர்)
பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் தமிழ்நாட்டில் உள்ளதா என்ற கேள்விக்கு..
ஒரு சிலருக்கு அறிகுறிகள் தெரிகிறது. அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளது என்றார்.