காந்திகிராமம் பல்கலைக்கழகத்திற்கு நிரந்தரப் பதிவாளரை நியமிக்க வேண்டும் என காந்திகிராமம் பல்கலைக்கழகப் பேராசிரியர் சங்கத்தினர் அமைதியான முறையில் கருப்பு முகக்கவசம் மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் பல்கலைக்கழகப் பதிவாளராகப் பொறுப்பேற்ற வி.பி.ஆர்.சிவக்குமார் 5 ஆண்டுக்காலம் பதவி வகித்து நிறைவு பெற்ற நிலையில், மீண்டும் 6 மாதக்காலம் அவருடைய பதவி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அவருடைய பதவிக்காலம் 09.04.2023 அன்று முடிவுற்ற நிலையில், தொடர்ந்து 2வது முறையாக அவருக்கு 3 மாதக்காலம் பதவி நீட்டிப்பு செய்யப்பட்டது. இதையறிந்த பல்கலைக்கழகப் பேராசிரியர் சங்கத்தினர் கடந்த 10.04.2023 அன்று மதியம் 1 மணியளவில் பல்கலைக்கழக பெல் மைதானம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு தனியாக கூட்டமைப்பினர் 17ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.
அதன்படி திங்கள் கிழமை மதியம் 1 மணியளவில் பல்கலைக்கழக பெல் மைதானம் முன்பு பல்கலைக்கழகப் பேராசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பேராசிரியர் சங்க தலைவர் ராஜா (எ) பிரான்மலை தலைமை தாங்கினார். இணைச்செயலாளர் மணிவேல் முன்னிலை வகித்தார். செயலாளர் சண்முகவடிவு வரவேற்று பேசினார். பேராசிரியர் சங்கத்தினர் வாயில் கருப்பு முகக்கவசம் அணிந்து, கருப்பு பேட்ஜ் அணிந்து அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய போராட்டக்குழு தலைவர் ராஜா, 2வது முறையாக பல்கலைக்கழகப் பதிவாளருக்கு பதவி நீட்டிப்பு செய்ததை ரத்து செய்ய வேண்டுமென்றும், பல்கலைக்கழகத்திற்கு நிரந்தரப் பதிவாளரை நியமிக்க வேண்டும் எனவும் கோசமிட்டதோடு, பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழு, திட்டமிடல் மற்றும் கண்காணிப்புக் குழு, கல்வியியல் குழு, நிதிக்குழு ஆகியவற்றின் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்த வேண்டுமென்றும், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்கத்திற்கு நிதிகளை முறையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும், ஓய்வுபெற்ற பேராசிரியர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், பேராசிரியர்கள் குடியிருப்புகளை முறையாகப் பராமரிப்பு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அப்போது செய்தி சேகரிக்கச் சென்ற நிருபர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதை அறிந்த போராட்டக்குழுவினர் நாளை முதல் மதியம் 1 மணிக்கு பல்கலைக்கழக நுழைவுவாயில் முன்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் மகாதேவன், நிர்வாக கமிட்டியை சேர்ந்த சத்யா, ராமசுப்பு, அறிவழகன், டேவிட் ஜெயராஜ் பிராங்க்ளின் உட்பட 50க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து போராட்டக்குழுவினர் கூறுகையில், பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தர் குர்மித் சிங் அவர்கள் 11ம் தேதி செவ்வாய் கிழமை மாலை 4 மணி அளவில் காணொளி காட்சி மூலம் பேராசிரியர் சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஆசிரியர்கள் அந்த பணியை மட்டும் தான் செய்ய வேண்டும் மற்றபடி நிர்வாக முடிவுகளில் தலையிடக்கூடாது எனப் பேசியுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பேராசிரியர் சங்கத்தினர் எந்த பல்கலைக்கழக விதியின் அடிப்படையில் நீங்கள் பல்கலைக்கழகப் பதிவாளர் வி.பி.ஆர்.சிவக்குமாருக்கு 2வது முறையாக பதவி நீட்டிப்பு செய்துள்ளீர்கள் எனக் கேள்வி எழுப்பியதோடு, நீங்கள் முறைப்படி நடந்திருந்தால் நாங்கள் இந்த போராட்டம் நடத்தி இருக்க மாட்டோம் எனக் கூறியதோடு பல்கலைக்கழகப் பதிவாளருக்கு 2வது முறையாக நீட்டிப்பு செய்திருப்பதை ரத்து செய்யும் வரை போராட்டம் நடத்துவோம் எனச் சொல்லியதை அடுத்து 17.04.2023 முதல் தொடர்ந்து அகிம்சை வழியில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.
பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் போராட்டத்தினால் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பேராசிரியர்களுக்கு ஆதரவாக அலுவலர்கள் சங்கத்தினரும், மாணவர்களும் போராட்டத்தில் கலந்து கொள்ள தயாராகி வருகின்றனர்.