திண்டுக்கல் மாவட்டத்தில் ஐந்து உலோக சிலைகளை ரூ.12 கோடிக்கு விற்க முயன்ற நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை காவல்நிலைய எல்லையில் ஆதிநாத பெருமாள் ரங்கநாயகி அமமாள் கோவில் உள்ளது. இக்கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வேண்டுதல்கள் நிறைவேறுவதால் பக்தர்கள் பணம் மற்றும் நகை உள்ளிட்ட பொருட்களை இக்கோவிலுக்கு நன்கொடையாக அளித்து வருகின்றனர். இதன் வாயிலாக 2007ல் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சந்திரசேகர், பார்வதி ஆகியோரின் உலோக சிலைகள் செய்து நிறுவப்பட்டன.
இந்நிலையில் 2021 மே 21ல் கோவிலுக்குள் புகுந்த திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடியைச் சேர்ந்த பிரபாகர், சீலவாடியைச் சேர்ந்த குமார், வெங்கடேசன் ஆகியோர் கோவில் நிர்வாகிகளான சண்முகசுந்தரம், பாண்டியன், ராஜ்குமார் ஆகியோரை கத்தியை காட்டி மிரட்டி அவர்களை ஒரு அறையில் அடைத்தனர். பின் ஐந்து சிலைகளையும் திருடிச் சென்றனர்.
இது தொடர்பாக அறநிலையத் துறை அதிகாரிகள் போலீசாரிடம் புகார் அளிக்கவில்லை. தற்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஜெயந்த் முரளிக்கு ரகசிய தகவல் கிடைத்தள்ளது. இதையடுத்து ஐ.ஜி. தினகரன் தலைமையிலான போலீசார் விசாரணையில் இறங்கினர். அப்போது திருடப்பட்ட சிலைகள் திண்டுக்கல்லைச் சேர்ந்த பால்ராஜ், தினேஷ், இளவரசன் உள்ளிட்டோரிடம் இருப்பதை கண்டுபிடித்தனர். இச்சிலைகளை 12 கோடி ரூபாய்க்கு விற்க முயற்சி செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து கூடுதல் எஸ்.பி மலைச்சாமி தலைமையில் தனிப்படை போலீசார் சிலைகளை வாங்கும் புரோக்கர்கள் போல அவர்களை சந்தித்தனர். ஆனால் சிலைகளை காண்பிக்கவில்லை. போலீசார் ஏழு நாட்களாக போராடி நம்ப வைத்து திண்டுக்கல்லைச் சேர்ந்த பால்ராஜ், இளவரசன், பிரபாகர் மற்றும் தினேஷ் ஆகியோரை நேற்று கைது செய்தனர். சிலைகள் மீட்கப்பட்டுள்ளன,மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.