Skip to main content

ஓ.பி.எஸ். மனைவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பாமக நிறுவனர்!

Published on 02/09/2021 | Edited on 02/09/2021

 

Founder of PMK mourns death of OPS wife

 

சென்னையில் நேற்று (1.09.2021) அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (63) மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரழந்தார். கடந்த இரண்டு வாரங்களாகவே அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஓ.பி.எஸ். - விஜயலட்சுமி தம்பதிக்கு ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் என்னும் இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

 

இவரது உடலுக்கு அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும், மதிமுக கட்சித் தலைவர் வைகோ, விசிக கட்சித் தலைவர் திருமாவளவன், திரையுல பிரபலங்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி ஓ.பி.எஸ்.க்கு ஆறுதல் கூறினர். இந்த நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள பன்னீர்செல்வம் வீட்டிற்கு, விஜயலட்சுமி உடல் நேற்று மாலை 6.15 மணிக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்பு பொது மக்கள், அரசியல் கட்சியினர் என பலரும் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.

 

மேலும் விஜயலட்சுமி உடல், பெரியகுளம் வடகரை சுடுகாட்டில் இன்று காலை தகனம் செய்யப்படுகிறது. அந்த வகையில் ஓ.பி.எஸ் மனைவியின் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்தனர். அதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டார். அதில் தெரிவித்ததாவது, “அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் விஜயலட்சுமி அம்மையார் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

 

பொதுவாழ்க்கையில் ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் முன்னேற்றத்திற்கு அனைத்து வகைகளிலும் துணை நின்றவர் திருமதி விஜயலட்சுமி அம்மையார் அவர்கள். விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றவர். 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது அவரது வீட்டுக்குச் சென்றபோது இதை நேரில் அனுபவித்தேன். அம்மையாரின் மறைவு ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். திருமதி விஜயலட்சுமி அம்மையார் அவர்களை இழந்து வாடும் ஓ. பன்னீர்செல்வம், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்