தமிழ்நாடு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ், கடந்த ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தின்போது பாதுகாப்புக்காக உடன் சென்றார். அப்போது ராஜேஷ் தாஸ், பெண் எஸ்.பி.யை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி. அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. பின்னர், சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், அவருக்கு உடந்தையாக இருந்த செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர் சிபிசிஐடி போலீசார். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்துவரும் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி. ஆகியோர் ஆஜராக உள்ளனர்.