Skip to main content

நீதிபதி முன்பு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜர்!

Published on 22/02/2022 | Edited on 22/02/2022

 

Former Minister Jayakumar Azhar before the judge!

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது, வண்ணாரப்பேட்டை 49 ஆவது வார்டில் வாக்களிக்கச் சென்ற ஒருவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அ.தி.மு.க.வினர் அரைநிர்வாணமாக்கித் தாக்கியதாக, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வைச் சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

அதன் தொடர்ச்சியாக, சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, காவல்துறையினர் அதிரடி கைது செய்தனர். ஜெயக்குமாரை சுமார் 08.20 மணிக்கு காவல்துறையினர் கைது செய்த நிலையில், சேத்துப்பட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் சுமார் நான்கு மணி நேரத்திற்கு பின்பு நள்ளிரவு 12.00 மணியளவில் ஜெயக்குமாரை காவல்துறையினர் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்ற நீதித்துறை நடுவர் முரளிகிருஷ்ணன் வீட்டில் ஆஜர்படுத்தினர். 

 

இதனிடையே, சென்னை எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பு பகுதியில் 100- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்