தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலத்தடி நீரை பாதுகாக்க பல வருடங்களாக பராமரிப்பு இன்றி பாழடைந்து கிடந்த நீர்நிலைகளை சீரமைத்து மழைத் தண்ணீரையும், காவிரி தண்ணீரையும் நிரப்பி நிலத்தடி நீரை பாதுகாப்போம் என்ற முயற்சியில் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்ட இளைஞர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர்களின் சொந்த செலவில் தொடங்கப்பட்ட இந்த நீர்நிலை பாதுகாப்பு சீரமைப்பு பணிகளுக்கு இளைஞர்களின் ஆர்வத்தை பார்த்து தன்னார்வமுள்ள சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்தமங்கலம், மாங்காடு, வடகாடு, நெடுவாசல் உள்ளிட்ட பல கிராமங்களிலும் அதேபோல ஏம்பல் கிராமத்திலும் குளம் சீரமைப்பு பணிகளை இளைஞர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். ஆனால் குளங்கள் சீரமைக்க பட்டாலும் அதற்கு தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால்களை சீரமைக்க முடியாமல் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் அவற்றை அகற்ற அதிகாரிகளிடம் தொடர்ந்து மன்றாடி வருகின்றனர். அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை.
இதனால கடந்த சில நாட்களாக பெய்த கனமழையிலும் குளங்களுக்கு தண்ணீர் வராமல் வீணாகிப் போனது. அதேபோல தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணி பெரியகுளம் ஏரி சுமார் 550 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த ஏரியை கைஃபா அமைப்பினர் கடந்த 70 நாட்களுக்கு முன்பு சீரமைக்க தொடங்கினார்கள். இந்த பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. பலப்படுத்தும் கரைகளில் பனை விதைகள், வெட்டிவேர், பல வகை மரக்கன்றுகளை நட்டு வளர்க்கவும் தொடங்கியுள்ளனர்.
அதேபோல மிகப் பெரிய ஏரியில் புதிய முயற்சியாக பறவைகள் உயிரினங்கள் வாழ மண் திட்டுகள் அமைத்து அதில் அடர் வனம் அமைக்கும் பணியையும் தொடங்கியுள்ளனர். ஏரிகளில் தண்ணீர் நிரம்பி இருக்கும்போது பறவைகள் உயிரினங்கள் அந்த அடர் வனத்தில் வாழ முடியும் இனப்பெருக்கம் செய்ய முடியும் அதனால் இந்த முயற்சியையும் மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் அழிவின் விளிம்பில் உள்ள பறவையினங்களும் மீட்கப்படும் என்பதில் சந்தோசமே. அதேபோல தஞ்சை மாவட்டத்தில் ஒட்டங்காடு கிராமத்தில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவு உள்ள ஏரியை சீரமைத்த இளைஞர்கள் கரைகளில் வெட்டிவேர், மரக்கன்றுகள் நட்டதுடன் குளத்தின் நடுவில் ஆங்காங்கே மண் திட்டுகள் அமைத்து அடர்வனம் அமைத்து வருகின்றனர்.
நாடியம் கிராமத்தில் மூன்றாண்டுகளுக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை ரத்து செய்து குளம் சீரமைக்கும் பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர். குருவிக்கரம்பை கிராமத்திலும் இளைஞர்கள் முயற்சிகள் நீர்நிலை சீரமைப்பு பணி தொடர்ந்து நடக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் பல நீர்நிலைகளுக்கு கல்லணை தண்ணீர் நிரம்பி வருகிறது அதனால் இளைஞர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் பல வருடங்களுக்கு பிறகு நீர்நிலைகளில் தண்ணீர் பார்க்கும் சந்தோஷமே தனி.
இளைஞர்களால் சொந்த செலவில் சீரமைக்கப்படும் நீர்நிலைகளில் குருங்காடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு உதவியாக அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்பதே அந்தப்பகுதி மக்களின் எண்ணமும்.