கோவையில் உணவு கிடக்கிலிருந்து படையெடுக்கும் செல் பூச்சிகளால் பொதுமக்கள் அவதி!
கோவை காந்திமாநகர் பகுதியில் மத்திய அரசிற்கு சொந்தமான இந்திய உணவு கழகத்தின் கிடங்கு அமைந்துள்ளது. 22 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கிடங்கில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் டன் தானியங்கள் சேமித்து வைக்க முடியும். இந்த கிடங்கிலிருந்து செல் பூச்சிகள் அருகே உள்ள முருகன் நகர், ஸ்ரீராம் நகர் பகுதி குடியிருப்பிற்குள் புகுவதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், செல் பூச்சிகளால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதியில் திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ திடீர் ஆய்வு மேற்கொண்டார். செல் பூச்சிகளை அப்பகுதி பொதுமக்கள் அவருக்கு காண்பித்தனர். தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களிடையே குறைகளை கேட்டறிந்தவர், இந்திய உணவு கிடக்கிற்கு சென்று கிடங்கை பார்வையிட்டார். மேலும், இந்த கிடங்கின் செயல்பாடுகளை கேட்டறிந்தவர், இந்த செல் பூச்சிகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, அவர் பேட்டியின்போது கூறுகையில்;- இந்திய உணவு கழகத்தின் இந்த கிடங்கு 22 ஏக்கர் பரப்பளவில் உள்ளதாகவும், 12 கிடங்குகள் உள்ள நிலையில் இவற்றின் மூலம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் டன் தானியங்கள் சேமித்துவைக்க முடியும் என்றார். 1982 ஆண்டு துவங்கப்பட்ட இந்த கிடங்கிலிருந்து செல் பூச்சிகள் பறந்து அருகே உள்ள குடியிருப்பிற்குள் வருவதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். கண்கள், காது, உணவுகளில் இந்த பூச்சிகள் விழுவதால் இரவு நேரங்களில் தூக்கம் இன்றியும் தவித்து வருகின்றனர்.
தான் துணை மேயராக இருந்த போது, மருந்துகள் தெளிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவித்தவர், தற்போது இந்த செல் பூச்சி தொடர்பாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த்தாகவும் தெரிவித்தார். விஞ்ஞான முறையில் இந்த செல் பூச்சிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவு கழக கிடங்கின் தலைமை அலுவலக அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்த உள்ளதாக தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, திமுக வட்ட செயலாளர் மகேஷ்குமார், டைட்டஸ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
- அருள்குமார்