சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். காலை 7 மணி முதல் 5 பேர் கொண்ட அதிகாரிகள் பொன்முடி வீட்டில் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது சென்னை வீடு, அலுவலகம், விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சரின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பியுமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கு ஒன்றில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்று இருக்கிறதா என்பதன் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு அமைச்சரின் வீட்டில் சோதனை நடைபெற்று வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் பெங்களூரில் நடைக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்துகொள்ள இன்று காலை 11 மணியளவில் பெங்களூருக்குச் செல்லவுள்ளார்.
ஏற்கனவே பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அந்த நேரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியது, தற்போது பெங்களூரில் நடைபெறும் எதிர்க்கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ளவுள்ள நிலையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடத்தப்படுவது ஒரு அரசியல் பழிவாங்கல் என்று திமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றர்.