விருதுநகர் மாவட்டத்தில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக்கூறி மோசடியில் ஈடுபட்ட நபர்களிடம் இருந்து சினிமா ஷூட்டிங்கில் பயன்படுத்தப்படும் போலி ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கும்பல் ஒன்று சினிமா ஷூட்டிங்கிற்காக பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் 67 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட போலி ரூபாய் நோட்டுகளை கொடுக்க முயன்றபோது அவர்களுக்குள்ளாகவே நடைபெற்ற மோதல் காரணமாக பிடிபட்டனர். வத்திராயிருப்பு அருகே உள்ள தாணிப்பாறை பகுதியில் கேரளாவை சேர்ந்த சஜ்ஜித் குமார், கூடலூரைச் சேர்ந்த கனகசுந்தரம், திண்டுக்கல்லை சேர்ந்த மணி, கொடைக்கானலை சேர்ந்த செல்வம் ஆகிய நான்கு பேரும் சினிமா ஷூட்டிங்கிற்கு பயன்படுத்தும் 67 லட்சத்து 87 ஆயிரம் கொண்ட போலி ரூபாய் நோட்டுகளை கூமாபட்டியை சேர்ந்த பூமிராஜ், பாலமுருகன், குபேந்திரன், வினோத், ராஜா உள்ளிட்டோரிடம் பணத்தை இரட்டிப்பாக மாற்றித் தருவதாக பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
அப்பொழுது கேரளாவை சேர்ந்த சஜ்ஜித் குமாருக்கும், கூமாபட்டியை சேர்ந்த பூமிராஜுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது வத்திராயிருப்பு காவல்துறையினர் ரோந்துப்பணிக்காக அங்கு சென்ற நிலையில் அவர்களிடம் இந்த கும்பல் பிடிபட்டது. அவர்களிடம் இருந்த போலி ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், கேரளாவை சேர்ந்த சஜ்ஜித் குமார், கூமாபட்டியை சேர்ந்த பூமிராஜ், பாலமுருகன், குபேந்திரன், கனகராஜ் ஆகிய ஐந்து பேரை கைது செய்துள்ளனர். மேலும் நான்கு பேரைத் தேடி வருகின்றனர்.