பெரம்பலூரில் ஏரியில் மீன் பிடிப்பதில் இரு தரப்பினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்ட நிலையில், ஆறு இருசக்கர வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்களுக்கும் மீனவர் சங்கத்தினருக்கும் இடையே நடைபெற்ற இந்த மோதல் காரணமாக நேற்று (04.07.2021) அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் ஊரில் உள்ளது பெரிய ஏரி. இந்த ஏரி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலையில், இந்த ஏரியானது குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. மீனவர் சங்கத்தினர் ஏரியைக் குத்தகைக்கு எடுத்திருந்தனர். பெரிய ஏரியில் அரும்பாவூர் பொதுமக்கள் கடந்த வாரமே மீன்பிடி திருவிழா நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது மீனவர்கள் சங்கத்தின் சார்பில் அரும்பாவூர் காவல் நிலையத்தில் மீன்பிடி திருவிழாவிற்கு அனுமதி அளிக்கக்கூடாது என புகார் அளிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மீன் பிடிக்கும் முடிவை கடந்த வாரம் கைவிட்டனர்.
இந்தநிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரிய ஏரியில் மீன் பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அரும்பாவூர், கடம்பூர், பொன்னம்மாதுறை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வலை உள்ளிட்ட மீன்பிடி பொருட்களுடன் பெரிய ஏரியில் மீன் பிடிக்க திரண்டனர். அப்போது வந்த மீனவர் சங்கத்தினர், தாங்கள் ஏரியைக் குத்தகைக்கு எடுத்துள்ளதால் யாரும் மீன்பிடிக்கக் கூடாது என தெரிவித்தனர். அப்போது பொதுமக்களுக்கும் மீனவர் சங்கத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. மோதலில் ஏரிக்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 6 இருசக்கர வாகனங்கள் முழுமையாக தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குத்தகைதாரர்கள் கொடுத்த புகாரில் 14 பேர் மீதும், மீன் பிடித்தவர்கள் கொடுத்த புகாரில் 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது அரும்பாவூர் காவல்துறை.