Skip to main content

முதல் உலக முதலீட்டாளர் மாநாடே கானல்நீர்? ஒப்பந்தங்கள் பற்றி விளக்கம் உண்டா? -ஸ்டாலின் கேள்வி?

Published on 28/09/2018 | Edited on 28/09/2018

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது, 

மற்ற மாநில முதல்வர்கள் எல்லாம் தமிழகம் வந்து முதலீடு தேடுகிறார்கள். தமிழகத்தில் உள்ள தொழில் முனைவோர் எல்லாம் அண்டை மாநிலங்களை நோக்கி அ.தி.மு.க அரசின் கமிஷன் கலாச்சாரத்தால் ஓடுகிறார்கள். அப்படியொரு அவல நிலைமை நீடித்து நிர்வாகம் ஸ்தம்பித்து நிற்கின்ற நேரத்தில், “2019 ஆம் ஆண்டு ஜனவரி 23-24 ஆகிய தேதிகளில், சென்னையில் நடைபெறவுள்ள இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், குஜராத்திலிருந்து மட்டும் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு தமிழகத்திற்குக் கிடைக்கும்” என்று தொழில் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அறிவித்திருப்பது அனைவர்க்கும் ஆச்சர்யமாக இருக்கிறது.

 

stalin

 

ஜெயலலிதா நடத்திய முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, 2.42 லட்சம் கோடி முதலீடுகள் பெறப்போவதாக அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்றுவரை அந்த முதல் மாநாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கானல் நீராகவே, எதற்கும் பயன்படாமல் இருக்கின்றன. சட்டமன்றத்தில் கூட கேள்வி எழுப்பியும், அதற்கு முதலமைச்சரிடமிருந்தோ, தொழில்துறை அமைச்சரிடமிருந்தோ எல்லோரும் புரிந்து கொள்ளக்கூடிய தெளிவான பதில் இதுவரை இல்லை.

 

பெறப்பட்ட முதலீடுகள் குறித்து - அவை உள்ளபடியே பெறப்பட்டிருந்தால், சரியான தரவுகளுடன் ஒரு வெள்ளையறிக்கை வெளியிடக்கூட இந்த அரசுக்குத் தன்னம்பிக்கை இல்லை. 2011 முதல் 2015 வரை முன்மொழியப்பட்ட, 1 கோடியே 55 லட்சத்து 807 ரூபாய் முதலீடுகளில், வெறும் 5620 கோடி ரூபாய் மட்டுமே பெறப்பட்டிருக்கிறது என்று வெளிவந்த புள்ளி விவரம், அ.தி.மு.க அரசின் நிர்வாகத்தை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. முன்மொழியப்பட்ட முதலீடுகளில், வெறும் 3.6 சதவீதம் மட்டுமே பெறப்பட்டுள்ளது என்பது, ஏதோ தேய்ந்து கட்டெறும்பு கதை சொல்வார்களே அதைப்போலாகி, அந்த உண்மை இந்த அரசின் முகத்தில் செதுக்கப்பட்டுள்ள அவமானமாகவே இருக்கிறது.

 

தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களின் வளர்ச்சி, தமிழகத்தில் மிகவும் குறைந்து வருகிறது. மத்திய புள்ளியியல் துறை நிறுவனம் வெளியிட்டுள்ள சர்வேயின்படி, இந்த வளர்ச்சி தேசிய சராசரியான 7.1 சதவீதத்தை விட மிகவும் குறைந்த நிலையில் - அதாவது 4.8 சதவீதமாகக் குறைந்து விட்டது. கேரளா மற்றும் ஆந்திராவை விட தமிழகம் பின்தங்கி விட்ட சூழ்நிலை அ.தி.மு.க ஆட்சியில் சுற்றி வளைத்து விட்டது. போக்குவரத்து, உணவகங்கள், வர்த்தகம், தொடர்பு சாதனங்கள் போன்றவற்றில் தேசிய சராசரியான 8.9. சதவீதத்தை விடக் குறைந்து, தமிழ்நாடு வெறும் 6.2 சதவீத வளர்ச்சியோடு அ.தி.மு.க ஆட்சியில் வளர்ச்சி கூனிக் குறுகி நிற்கிறது.

 

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 2016-17ல் 0.86 சதவீதம் சரிந்து விட்டது என்று நிதி அயோக் சுட்டிக்காட்டியுள்ளது. 2017-18ல் அதிக நிதிப் பற்றாக்குறை உள்ள மாநிலங்களில், தமிழ்நாடு 40 ஆயிரத்து 530 கோடி ரூபாயுடன் மூன்றாவது மாநிலமாக இருக்கிறது என்று ரிசர்வ் வங்கியின் அறிக்கை குறிப்பிடுகிறது என்பது பாராட்டுரை அல்ல இகழ்ச்சியுரை என்பதை உணரவேண்டும். இது 2018-19 தமிழக நிதிநிலை அறிக்கையின் அடிப்படையில், 44 ஆயிரத்து 481 கோடி ரூபாயாக உயர்ந்து விட்டது.

 

கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு, மிக மோசமாக வருவாய் வரவு குறைந்திருக்கிறது என்று இந்தியத் தணிக்கைத் துறை அறிக்கை சுட்டிக் காட்டியிருக்கிறது. 2018-19 தமிழக நிதிநிலை அறிக்கையின் அடிப்படையில் வருவாய்ப் பற்றாக்குறை 17,491 கோடி! இவை எல்லாவற்றையும் விட தமிழகத்தின் கடன் நிலுவைத் தொகை மட்டும் 3.55 லட்சம் கோடி! ஆக அ.தி.மு.க அரசின் மிகமோசமான நிதி நிர்வாகத்தால் இன்றைக்கு மாநிலம் நிதிப்பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை, மூன்றரை லட்சம் கோடிக்கு மேல் கடன் என்று ஒட்டுமொத்த “மாநில நிதி நிர்வாகம்” மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது.

 

முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெறப்பட்ட முதலீடுகள் என்ன ஆயிற்று என்றே யாருக்கும் சொல்லாமல், புதிய உலக முதலீட்டாளர்கள் மாநாடு பற்றி அறிவிப்பும் வெளியிட்டு, அமைச்சர்களும் அதிகாரிகளும் கடும் நிதிப் பற்றாக்குறையிலும் உலகம் பூராவும், நாடு முழுவதும் “முதலீடுகளை ஈர்க்கிறோம்” என்று சுற்றுலா சென்று கொண்டிருக்கிறார்கள். ஊழல் நிர்வாகம், ஊழல் அமைச்சர்கள், ஊழல் முதலமைச்சர் என்ற மூன்று முக்கிய (?) “முதலீடுகளை” மட்டும் வைத்துக்கொண்டு, இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலீடுகளை எப்படிப் பெறப் போகிறார்கள் என்பது இமயம் போன்ற பிரம்மாண்டமான கேள்வியாக எழுந்து நிற்கிறது. இந்த வேளையில்தான் தொழில்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர், முன்பு முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது ஊழல் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்ட கூடுதல் தலைமைச் செயலாளர், இப்போது குஜராத்திலிருந்து 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை கொண்டு வரப் போகிறோம் என்று கூறியிருக்கிறார்.

 

ஏற்கனவே முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு “கானல் நீராகி”க் கலைந்து விட்ட நிலையில், இன்னொரு கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டுக் கொண்டு, தமிழக மக்களை ஏமாற்றும் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமியின் கரத்தைப் பலப்படுத்த முன்வந்திருக்கும் தொழில்துறைச் செயலாளர், முதலில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்ன ஆயிற்று என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமியும் “தேர்தல் விளம்பரத்திற்காக” ஒரு முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதற்கு முன்பு, முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புர்ந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட 2.42 லட்சம் கோடி முதலீடுகளும் பெறப்பட்டு விட்டனவா என்பது பற்றி விளக்க வேண்டும்.

 

இல்லையேல் “கமிஷன் கலாச்சாரம்” “ஊழல் அநாகரீகம்” என்பதில் மூழ்கிக்கிடக்கும் அமைச்சர்களால், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை முழுதும் இழந்து விட்ட அ.தி.மு.க ஆட்சியில் நடத்தப்படும், இந்த இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாடும், ஊழல் அரசின் ஊதாரித்தனமான திருவிளையாடலாகவே அமைந்து, சம்பந்தப்பட்ட அனைவரையும் சங்கடத்தில் ஆழ்த்திவிடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்! என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்