உலகம் முழுவதும் கரோனா நோய் பரவி, அதிகாரபூர்வமாக 1 லட்சம் மக்களை பலி வாங்கியுள்ளது. சுமார் 14 லட்சம் மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிமிடம் வரை, நிமிடத்துக்கு ஒருவர் என்கிற கணக்கில் கரோனா நோயாளிகள் உருவாகிறார்கள். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் 900 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையிலும் கரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தாலுகாவை சேர்ந்த ஒருவர், சென்னையில் உள்ள ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஒரு கடையில் விற்பனை மேலாளராக பணியாற்றி வந்தார். 144 தடையுத்தரவுக்கு முன்பே மால்கள் மூடப்பட்டதால் தனது சொந்த ஊருக்கு வந்துவிட்டார். அப்படி வந்தருக்கு தொடர்ச்சியாக சளி, காய்ச்சல் என இருந்ததால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட ரத்தம் மற்றும் உமிழ்நீர் பரிசோதனையில் அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் கரோனா நோயாளியாக, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். கடந்த 14 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தவருக்கு, தொடர்ச்சியாக ரத்த பரிசோதனை செய்ததில் அவருக்கு கரோனா நெகட்டிவ் என வந்ததால் ஏப்ரல் 11ந்தேதி மருத்துவர்களின் முடிவின்படி வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
அண்ணாமலையார் கோயில் பிரசாதம் மற்றும் பழங்களை மாவட்ட ஆட்சியர் அவர்களும், மருத்துவர்களும் வழங்கி இனிதே வழியனுப்பி வைத்தார்கள். குணமடைந்த நபர் மாவட்ட ஆட்சியர், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட அனைவருக்கும் இரு கரங்கள் கூப்பி, கண்ணீர் மல்க தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார். மேலும், 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏறுவதற்கு முன்பு குணமடைந்த நபர் வெற்றியின் அடையாளமாக தனது பெருவிரலை காண்பித்தது, அங்கிருந்த அனைவரையும் உணர்வுப்பூர்வமாக நெகிழ்ச்சி அடைய செய்தார்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 10 நபர்களுக்கு கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் நபராக கரோனா நோய் உறுதி செய்யப்பட்ட நபருக்கு இரண்டு முறை பரிசோதனை மேற்கொண்டதில், கரோனா நோய் இல்லை என முடிவுகள் வந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. இவரது குடும்பத்தார் உட்பட இவர் பழகிய கிராமத்து நபர்கள் யாருக்கும் நோய் தொற்று இல்லை என்பதால் மருத்துவ பாதுகாப்பு கண்காணிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
சிறப்பான சிகிச்சை அளித்து குணமாக்கிய மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களை மாவட்ட ஆட்சி தலைவர் கந்தசாமி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் மருத்துவர். கே. திருமால்பாபு, துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மருத்துவர். ஆர். மீரா போன்றோர் பாராட்டினர்.