கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகில் உள்ள செங்கமேடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இரண்டு கட்டடங்களில் செயல்பட்டுவருகிறது. பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட ஐந்து ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். நேற்று (19.08.2021) பணி முடிந்து மதியம் அனைவரும் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். இந்த நிலையில், சாலைக்குப் பின்புறம் இருந்த பள்ளியின் கான்கிரீட் கட்டடம் ஒன்றில் தீப்பற்றி கரும்புகை வெளியேறியுள்ளது.
இந்தத் தீ, அந்தப் பள்ளியின் மற்ற வகுப்பறைகளுக்கும் பரவியது. இதில் கட்டடத்திலிருந்த, மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாடப்புத்தகங்கள், சீருடைகள், புத்தகப் பைகள், இரண்டு கம்ப்யூட்டர்கள், 3 லேப்டாப்கள், மூன்று பீரோக்கள், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், பிள்ளைகள் படிக்கும் டேபிள் - சேர் உட்பட சுமார் 7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
பள்ளி கட்டடத்தில் தீப்பிடித்த தகவலறிந்த ஊர் பொதுமக்களும் இளைஞர்களும் அருகிலிருந்த ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். அதேசமயம், தகவலறிந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் வசந்த ராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் பள்ளியில் இருந்த அனைத்துப் பொருட்களும் தீயில் எரிந்து சாம்பலாகி கிடந்தன. தீ விபத்திற்கான காரணம் குறித்து ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
கரோனா நோய் பரவல் காரணமாக பிள்ளைகள் பள்ளிக்கு வருகை தராத நிலையில், வேறு பணிகள் காரணமாக பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் பணி முடித்து பள்ளியைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்ற பிறகு, திடீரென இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்? மின்கசிவு காரணமா அல்லது வேறு எந்த காரணத்தினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கும் என போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.