தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகில் நேற்று (30.11.2024) மாலை 5 மணி அளவில் கரையைக் கடக்க துவங்கியது. நேற்று இரவு 10.30 மணிக்கும் 11.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடந்தது. இது புதுச்சேரிக்கு அருகில் நிலை கொண்டிருந்தது.
இந்நிலையில் நேற்று கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. காலை 11.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்குத் தென்மேற்கே 120 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. கடலூருக்கு வடக்கே 30 கி.மீ. தொலைவிலும், விழுப்புரத்திற்குக் கிழக்கே 40 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே சமயம், இன்று (01.12.2024) வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள், புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர்,மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும் பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர்,கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (02.12.2024) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிகக் கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
படங்கள் : எஸ்.பி. சுந்தர்