தென்காசி மாவட்டம் தமிழக - கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது புளியரை ஊராட்சி. இந்த பகுதியில் மோட்டார் வாகன சோதனை சாவடிகளில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் கேரளாவுக்கு செல்கிறது. புளியரையில் இருந்து கேரளா செல்லும் வாகனங்களை சோதனை செய்ய வனத்துறை, வணிகவரி, காவல், போக்குவரத்து, வருவாய்த்துறை ஆகிய துறைகளின் சோதனை சாவடிகள் உள்ளது.
இந்நிலையில், இத்தகைய சோதனை சாவடிகளில் ரேஷன் அரிசி, கனிமவளங்கள் என போன்றவை கடத்தப்படுகிறதா? என கண்காணிக்கப்படுகிறது. ஆனால், அதிகாரிகள் சிலர் லஞ்சம் வாங்கிக்கொண்டு அரசின் உத்தரவை கண்டு கொள்ளாமல் செயல்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. இந்நிலையில், புளியரை மோட்டார் வாகன சோதனை சாவடிகளில் அதிகளவில் லஞ்சம் பெறுவதாக தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில், அந்த புகாரை எடுத்துக்கொண்ட அதிகாரிகள் கடந்த 19 ஆம் தேதி அதிகாலை நேரத்தில் புளியரை சோதனை சாவடிக்கு மாற்று உடையில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, புளியரை சோதனை சாவடியில் பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளரான பிரேமா ஞானகுமாரி அன்றிரவு 8.30 மணியளவில் தனது பணியை முடித்துக்கொண்டு கணவர் ஷாட்சன் என்பவருடன் வீட்டிற்கு காரில் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தார்.
அந்த நேரத்தில், இதனை கண்காணித்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வாளர் பிரேமா ஞானகுமாரியின் காரை பின்தொடர்ந்தனர். இதனிடையே, அவர்கள் தவணை விலக்கு பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவர்களுடைய காரை வழிமறித்தனர். இதையடுத்து, பிரேமா ஞானகுமாரியை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் அவரது காரை முழுவதுமாக சோதனை செய்தனர். அப்போது, காருக்குள் இருந்த பேக்கில் கட்டு கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, இந்த பணம் யாருடையது அலுவலக பணமா? அல்லது லஞ்ச பணமா என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அது சோதனை சாவடியில் இருக்கும் பிரேமா ஞானகுமாரி ஏராளமான கனரக லாரி ஓட்டுநர்கள், சரக்கு வாகன ஓட்டுநர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களிடம் லஞ்சமாக பெற்ற பணம் என்பது தெரியவந்தது.
இத்தகைய சூழலில், அந்த பேக்கில் இருந்த லஞ்ச பணம் சுமார் 2 லட்சத்து 70 ஆயிரத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதன்பிறகு, மோட்டார் வாகன ஆய்வாளரான பிரேமா ஞானகுமாரியை கைது செய்து அழைத்துச் சென்றனர். பின்னர், அவரை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, இந்த விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, தமிழக கேரள எல்லை சோதனை சாவடியில் பணியில் இருக்கும் மோட்டார் வாகன ஆய்வாளர் கட்டு கட்டாக லஞ்சம் வாங்கிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.