
திருச்சி அருகே தம்பதி கொலை செய்யப்பட்ட வீட்டில் 'I' (ஐ) குறியீடு ரத்தத்தால் எழுதப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பி.மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த சாரதா என்ற உறவுக்கார பெண்ணை காதலித்து அண்மையில் திருமணம் செய்து கொண்டார். உப்பிலியபுரம் அருகே உள்ள ஷோபனாபுரத்தில் ஒருவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்த ராஜ்குமார் விவசாயம் செய்து வந்தார். இதற்காக வயல் நடுவே இருந்த வீட்டில் ராஜ்குமாரும் அவரது மனைவியும் சாரதாவும் வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதி வீட்டு வாசலில் உள்ள கயிற்று கட்டிலில் தம்பதிகள் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அதிகாலையில் வந்த மர்ம கும்பல் கணவன், மனைவி இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவர் உடலையும் மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.

உயிரிழந்த ராஜ்குமார், சாரதா ஆகியோரின் செல்போன் அழைப்புகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சம்பவ இடத்திற்கு அருகே உள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை வைத்தும் விசாரணை நடைபெற்றது. செல்போன், சிசிடிவி காட்சி என எதை வைத்து விசாரணை நடத்தியும் தம்பதியை கொலை செய்தது யார் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியாத நிலையே இருந்தது. இந்நிலையில் தம்பதி வசித்து வந்த வீட்டின் கதவில் 'I' (ஐ) என்று ஆங்கில எழுத்து ரத்தத்தில் எழுதப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தம்பதியை கொலை செய்து விட்டு அவர்களின் ரத்தத்தை எடுத்து 'I' (ஐ) என்று எழுதிச் சென்றார்களா என்ற கோணத்தில் தற்பொழுது போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.