Skip to main content

'அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை' - மீண்டும் முன்ஜாமீன் கோரிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
'Father's health is not good'-MR Vijayabaskar seeks anticipatory bail again

தலைமறைவான முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் முன்ஜாமீன் மனுவை எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்துள்ளார்.

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஜூன் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது கடுமையான விவாதங்களுக்கு பிறகு மூன்று தரப்பு வாதங்களைக் கேட்ட மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் ஜூன் 25 ஆம் தேதிக்கு மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.

இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.தொடர்ந்து தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டிவரும் நிலையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரைப் பிடிக்க முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை மீண்டும் ஒருமுறை முன்ஜாமீன் மனு கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 'தன்னுடைய தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. எனவே கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை உடனிருந்து கவனிக்க வேண்டி இருப்பதால் சிபிசிஐடி போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்