Skip to main content

தந்தையிடம் சொத்தை பிடிங்கிக்கொண்டு வீதிக்கு அனுப்பிய மகன்: தீர்ப்பாயம் புகட்டிய பாடம்...

Published on 12/07/2019 | Edited on 13/07/2019

 

தந்தைக்கு சொந்தமான ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை தனது பெயருக்கு எழுதி வாங்கிக்கொண்ட மகன், தந்தை மற்றும் தாயை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகனுக்கு சப்-கலெக்டர் தக்க பாடத்தை புகட்டியுள்ளார்.
 

புதுச்சேரி மாநிலம் வழுதாவூர் சாலையைச் சேர்ந்தவர் சங்கரதாஸ். கூலித் தொழிலாளியான இவர் தனது உழைப்பில் சிறுக சிறுக சேமித்து, ''ராமசாமி பத்மாவதி எஸ்.ராஜ்மோகன் இல்லம்'' என்ற பெயரில் கனவு வீட்டை கட்டியுள்ளார். இவருக்கு சிவகாமி என்ற மனைவியும், ராஜ் மோகன் என்ற மகனும், சபிதா என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. அதனைத் தொடர்ந்து மகனுக்கும் காதல் திருமணத்தை செய்து வைத்தார். 


 

 

ஐ.டி.ஐ. படித்த தான் தொழில் தொடங்க வேண்டும் என்பதால், வங்கியில் கடன் பெற வீட்டு பத்திரம் வேண்டும் என்பதற்காக தன் பெயரில் வீட்டை எழுதி வைக்க வேண்டும் என்று மகன் ராஜ்மோகன் கூறியுள்ளார். இதனை நம்பிய சங்கரதாஸ், தன் பெயரில் இருந்த வீட்டை மகன் பெயரில் கடந்த 2016ஆம் ஆண்டு எழுதி வைத்துள்ளார். 

 

sangaradoss


 

நாளடைவில் பெற்றோரை மதிக்காத மகன், இருவரையும் வீட்டை விட்டு வெளியேற்றினார். மனைவி சிவகாமியுடன் எங்கே செல்வது என்று தெரியாமல் அலைந்த சங்கரதாஸ், தனது மகள் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு மகளுக்கு பாரமாக இருக்க விரும்பாத சங்கரதாஸ் வேலை தேடி அலைந்தார். வேலை தேடி அலைந்த இடத்தில் தனது நிலைமையை கூறியுள்ளார். 
 

அப்போது சிலர் ஒரு வழக்கறிஞரை சந்தித்துப் பேசுங்கள் என்று கூறியுள்ளனர். இதையடுத்து வழக்கறிஞர் ஒருவரை சந்தித்த சங்கரதாஸ், தனது நிலைமைய எடுத்து கூறியுள்ளார். அந்த வழக்கறிஞர், புதுச்சேரியில் உள்ள முதியோர் பராமரிப்பு தீர்வு நடுவர் தீப்பாயத்தில் சங்கரதாஸ் - சிவகாமி தம்பதியினரை புகார் அளிக்க வைத்தார். 


 

 

இதையடுத்து ராஜ்மோகனை அழைத்த தீர்ப்பாய நடுவர், பெற்றோரை அழைத்து பாதுகாக்குமாறு கூறியுள்ளார். இதனை ராஜ்மோகன் ஏற்க மறுத்தார். இதையடுத்து ராஜ்மோகன் பெயரில் 1614 சதுர அடி பரப்பளவில் இருந்த வீட்டின் பத்திரத்தை ரத்து செய்த தீர்ப்பாயம், அந்த சொத்தை சங்கரதாஸ்க்கு திருப்பித் தர உத்தரவிட்டது. இந்த உத்தரவை சங்கரதாஸிடம் அளித்தார் சப்-கலெக்டர் சுதாகர். சார்பதிவாளர், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கும் உத்தரவினை அனுப்பி வைத்தார். 
 



 

 

சார்ந்த செய்திகள்