Skip to main content

சொட்டுநீர் பாசன தகராறில் விவசாயி கொலை: 4 பெண்கள் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை!

Published on 14/07/2018 | Edited on 14/07/2018

 

sd


சேலம் அருகே, சொட்டுநீர் பாசன தகராறில் விவசாயியைக் கொலை செய்த வழக்கில் 4 பெண்கள் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் குற்றவியல் நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

 

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள தென்குமரை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். விவசாயி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மல்லிகேஸ்வரி என்பவருக்கும் தோட்டத்தில் சொட்டுநீர் பாசனம் செய்வதில் அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

 

இது தொடர்பாக வெங்கடாஜலம் தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இந்த புகார் குறித்து காவல்துறை விசாரணை நடந்து வந்த நிலையில், வெங்கடாசலத்தின் பாசன குழாய்களை மல்லிகேஸ்வரி குடும்பத்தினர் சேதப்படுத்தினர். இதனால், இருதரப்புக்கும் மோதல் வலுத்தது.

 

இந்நிலையில், மல்லிகேஸ்வரி மற்றும் அவருடைய மகன் செந்தில்குமார், உறவினர்கள் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதியன்று, வெங்கடாசலத்தை சரமாரியாக தாக்கியதில் அவர் இறந்தார். பின்னர் அந்த கும்பல், வெங்கடாசலத்தின் சடலத்தை கிணற்றில் வீசி விட்டு தப்பிச்சென்றனர். தலைவாசல் காவல்துறையினர் சடலத்தை மீட்டு, மல்லிகேஸ்வரி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

 
இந்த வழக்கு விசாரணை சேலம் மூன்றாவது கூடுதல் மாவட்ட மற்றும அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி, கொலை வழக்கில் கைதான மல்லிகேஸ்வரி, செந்தில்குமார், சத்தியவாணி, யுவராஜ், மாணிக்கம், தங்கம், கோமதி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். 

 

கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை கிடைத்த தகவலால் தென்குமரை கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

சார்ந்த செய்திகள்