கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பெருமுளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பருத்தி, மக்காச் சோளம் ஆகிய பயிர்களை சாகுபடி செய்து வந்தனர். அது சமயம் சில நாட்களுக்கு முன்பு பொழிந்த தொடர் மழையால் பயிர்கள் முழுமையாக சேதம் அடைந்து விவசாயிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
தொடர் மழை காரணமாக வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் 29 அடிக்கு மேல் தண்ணீர் பிடித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் மறுபக்கம் சாகுபடி செய்த விவசாயிகள் பயிர்களை அவசர அவசரமாக நிலங்களிலிருந்து வெளியேற்றி வருகின்றனர்.
இந்நிலையில் திடீரென்று பொதுப் பணித்துறையினர் வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்டதால் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால், அறுவடை செய்யும் நேரத்தில் பயிர்கள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குறிப்பிட்ட நாட்கள் தண்ணீரை நிறுத்தி வைக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் பாசன வாய்க்காலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதிப்படைந்த விவசாயி கூறும்போது, "பொதுப் பணித்துறையினர் அவர்களுக்குள் ஒரு குழுவை அமைத்துக் கொண்டு விவசாயிகளிடம் எவ்விதக் கலந்தாய்வும் செய்யாமல் தண்ணீரை நிறுத்துவதும், திறந்து விடுவதுமாக இருப்பதால் மழையிலும் தப்பிப் பிழைத்த கொஞ்ச நஞ்ச பயிர்களையும் எடுத்துச் செல்ல முடியவில்லை" எனக் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் உடனடியாக மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வுசெய்து பயிர்களை வெளியேற்றும் வரை தற்காலிகமாக வாய்க்காலில் வரும் தண்ணீரை நிறுத்திவைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.