2020-21ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுத் தொகை முற்றாக நிராகரிக்கப்பட்டதால் அதற்கு காரணமான அரசு அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி டெல்டா பாசன மாவட்டங்களின் கடைமடை மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் இயற்கை சீற்றத்தால் விவசாயம் பாதிப்பு அடைந்து வந்த போதிலும் பயிர் காப்பீட்டின் மூலமாக விவசாயிகள் ஓரளவிற்கு தாக்குப் பிடித்து தொடர்ந்து விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கீடு செய்வதில் அரசு அதிகாரிகள் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதால் முறையாக இன்சூரன்ஸ் கிடைக்காமல் போய்விடுகிறது என விவசாயிகள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த 2020-21ம் ஆண்டில் மழை, வெள்ளத்தால் சம்பா பயிர்கள் 90 சதவீதத்திற்கு மேல் பாதிப்படைந்தது. ஆனாலும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் பாதிப்பு அறவே இல்லை என்கிற தவறான கணக்கீட்டால் பாதிப்பு பூஜ்ஜியம் சதவீதம் என காப்பீட்டு நிறுவனத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். அதனால் சம்பா சாகுபடி மேற்கொண்டு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு முற்றாக பயிர் காப்பீடு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமான வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளை கண்டித்து நீடாமங்கலம் ஒளிமதி என்கிற இடத்தில் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் வேளாங்கண்ணி , திருவாரூர் , நாகை , திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.