சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கிராமப்புற விவசாயிகள் பெரும்பாலானோர் இயற்கை முறையில் உழவு செய்து விவசாய பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வந்தனர். சமீபகாலமாக நிலத்தை உழுவது, விதைப்பது, அறுவடை செய்வது அனைத்திற்கும் இயந்திரத்தை நாடவுள்ளது. கடந்த காலங்களில் மானாவாரி நிலத்தை சுத்தம் செய்து ஆழ உழுது வைத்திருப்பார்கள். ஆடி மாதம் நல்ல மழை பெய்யும். அந்த ஈரத்தில் மாடுகளை வைத்து ஏர் உழுது விதைப்பார்கள். ஏர் உழும் போது ஏறுக்கு பின்னே விதைகளை வைத்து விதைத்துக்கொண்டே செல்வார்கள்.
மழை ஈரம் காய்வதற்குள், மணிலா, ஆமணக்கு, துவரை, உளுந்து, பருத்தி சோளம் இப்படிப்பட்ட தானியங்களை விதைத்து அவை நல்ல முளைப்புத் திறன் பெற்று திடகாத்திரமாக வளர்ந்து விளைந்து அதிக அளவு மகசூல் கிடைத்து வந்தது. விவசாயிகளுக்கு இந்த தானியங்களை விளையவைப்பதற்கு விவசாயிகள் இயற்கை உரமான ஆடு மாடுகளின் கழிவுகளை எருவாக்கி விதைப்பதற்கு முன்பே நிலத்தில் பரவலாக இரைத்து நிலத்தை உழும்போது உரம் மண்ணோடு மண்ணாக கலந்துவிடும். மழை ஈரத்தில் விதைத்தவுடன் அந்த எருவின் சத்து பயிர்களை செழிப்பாக வளரவைத்து அதிக மகசூலைக் கொடுத்து வந்தது. படிப்படியாக விவசாய வேலைகளுக்கு டிராக்டர் போன்ற வாகனங்களை பயன்படுத்த ஆரம்பித்தனர். அதேபோன்று இயற்கை உரத்தை பயன்படுத்துவதற்குப் பதிலாக ரசாயன உரங்களை அதிக அளவில் பயன்படுத்தத் துவங்கினர்.
இதனால் விவசாய நிலங்களின் மண்ணின் தன்மை கெட்டுப் போனது. மலட்டுத்தன்மையானது. மேலும் எந்திரங்கள் மூலம் நிலத்தை உழுது விதைப்பதன் காரணமாகவும் விளைச்சல் குறைந்தது. இப்படிப்பட்ட நேரத்தில்தான் மறைந்த இயற்கை விஞ்ஞானி என்று அழைக்கப்படும் நம்மாழ்வார், இயற்கை உழவு முறை வேளாண்மையில் இயற்கை உரம் ஆகியவற்றை குறித்து மிகப் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். அவர் மறைந்தாலும் அவரை பின்பற்றி தற்போது இயற்கை முறை விவசாயத்தை அதிக அளவில் பின்பற்றத் தொடங்கி உள்ளனர். விவசாயிகள் சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவமழை கடலூர், அரியலூர், பெரம்பலூர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உட்பட பல்வேறு மாவட்டங்களில் 80 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.
இதன் காரணமாக ஏற்கனவே விவசாயிகள் பயிர் செய்திருந்த மணிலா, சோளம், பருத்தி, சம்பா நெற்பயிர் போன்றவை மழை நீரில் மூழ்கி அழுகி வீணாகி விவசாயிகளை பெரும் நஷ்டத்திற்கு ஆளாக்கியுள்ளது. தற்போது மழை வெள்ளம் வடிந்த நிலையில், புஞ்சை பகுதி நிலங்களில் உள்ள ஈரப்பதத்தை பயன்படுத்தி மாடுகளை கொண்டு உழவு செய்து உளுந்து, மணிலா. போன்ற விதைகளை விதைத்து குறுகிய காலத்தில் அறுவடை செய்ய கூடிய தானியங்களை விதைத்து வருகிறார்கள். அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியும் உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் சிலரிடம் நாம் கேட்டபோது, இயற்கையான முறையில் மாடுகளைக் கொண்டு உழவு செய்த நிலத்தில் விதைகளை கைகளால் ஊன்றி வருகிறோம். இப்படி செய்யும் விவசாய முறையும் அதன் மூலம் விதைகளின் முளைப்புத்திறன் திடகாத்திரமாக இருக்கும். அதேபோல் மகசூலும் மிக அதிக அளவில் கிடைக்கும். டிராக்டர் போன்ற இயந்திரங்களை கொண்டு விதைத்து விளைய வைக்கும் விவசாய முறையில் அதிக அளவு மகசூல் கிடைப்பது இல்லை. மேலும் மாடுகளைக் கொண்டு உழுது விவசாயம் செய்த எங்களது முன்னோர்கள் எங்களுக்கு கற்றுத் தந்த பாரம்பரிய விவசாய முறையை பின்பற்றுவது மிகவும் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் உள்ளது. இதன் மூலம் விளையும் தானியங்கள் ரசாயன உரங்களின் கலவை இல்லாதவை. இப்படிப்பட்ட தானியங்கள் மனித உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படுத்தாது. எனவே நம் முன்னோர்கள் காட்டிய வழியில் தற்போது விவசாய முறையை பின்பற்ற துவங்கியுள்ளோம் என்கிறார்கள்.
திட்டக்குடி, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, ஆண்டிமடம், வேப்பந்தட்டை, செட்டிகுளம் போன்ற பகுதிகளில் விவசாயம் செய்துவரும் பலரின் கருத்து மேலும் பல முன்னோடி விவசாயிகள் இதே முறையை விவசாயிகள் அதிக அளவில் பின்பற்ற வேண்டும். காலப்போக்கில் எந்திரங்கள் மூலம் விவசாயம் செய்வதை முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும். இதனால் ஆடு, மாடுகள் வளர்ப்பு அதிகரிக்கும். அதன் கழிவுகளை நிலத்தில் போடுவதின் மூலம் மண்ணின் தன்மை மேம்படும். ரசாயன உரம் தவிர்த்து இயற்கை உரத்தை பயன்படுத்துவதை அதிகரிக்க வேண்டும். இதை அரசும் பெயரளவுக்கு இல்லாமல் மிகுந்த அக்கறையோடு இதற்காக அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்து இப்படிப்பட்ட விவசாய முறையை வளர்த்தெடுக்க ஊக்கப்படுத்த வேண்டும். மேலும், சிறிதளவு நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் கூட தங்கள் நிலத்தை வங்கிகளில் அடமானம் வைத்து விவசாயம் செய்வதற்காக டிராக்டர் போன்ற இயந்திரங்களை வாங்குகிறார்கள். அப்படி வாங்கப்பட்ட கடனை அடைக்க முடியாமல் பலர் வங்கி அதிகாரிகளால் அவமானப்பட நேரிடுகிறது. வாங்கிய கடனை கட்ட முடியாததால் வங்கி அதிகாரிகள் அந்த வாகனங்களை எடுத்துச் சென்று விடுகிறார்கள். கடன் கட்டத் தவறிய விவசாயிகளின் பெயர்களை வங்கிகளின் முன்பு புகைப்படத்துடன் ஓட்டி கிரிமினல் குற்றவாளிகளைப் போல நடத்திய சம்பவங்கள் ஏற்கனவே பல நடந்துள்ளன. இதனால் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். எனவே இதுபோன்ற நிலையை தவிர்க்க வேண்டுமானால் மாடுகளை வளர்த்து அல்லது விலைக்கு வாங்கியோ விவசாயம் செய்வதே நம் முன்னோர்கள் காட்டிய சிறந்த வழி.
கடந்த காலங்களில் சித்திரை மாதம் கிராமப்புறங்களில் நல்லேர் உழவு கட்டும் நிகழ்ச்சி நடைபெறும். ஊரில் உழவு மாடுகள் வைத்துள்ள விவசாயிகள் ஒரே இடத்தில் ஒன்று கூடி ஏர் கலப்பையில் மாடுகளை கட்டி ஏர் உழுவார்கள். அதற்கு முன்பு ஏர் கலப்பையில் கட்டிய மாடுகளுக்கு முன்பு சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து அவர் முன்பு வாழை இலைகளைப் பரப்பி அதன் மீது காப்பரிசி, வாழைப்பழம், தேங்காய், வெற்றிலை பாக்கு வைத்து ஊதுபத்தி கொளுத்தி வைத்து தேங்காய் உடைத்து சூடத்தை ஏற்றி வைத்து எல்லோரும் பூமி தாயையும் சூரிய பகவானையும் மழைக்கு உரிய வருண பகவானையும் வணங்கி விட்டு கொஞ்ச நேரம் ஏர் உழுவார்கள்.
இதன் மூலம் அந்த ஆண்டு நல்ல மழை பெய்து வேளாண்மை செழிப்பாக இருக்கும். தங்கள் வாழ்க்கையும் வளமாக இருக்கும். வேளாண்மை வருமானத்தின் மூலம் குடும்பத்தில் உள்ள பிள்ளைகள் படிப்பு உரிய வயது வந்த ஆண், பெண் பிள்ளைகளுக்கு திருமணம் போன்ற சுப காரியங்கள் நடத்துவார்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையோடு காலம் காலமாக விவசாயம் செய்த அவர்களின் நம்பிக்கை வீண்போகாமல் இறைவனாலும் இயற்கையாலும் காப்பாற்றப்பட்டது. மீண்டும் அப்படிப்பட்ட இயற்கை உழவு, இயற்கை உரம், இயற்கை விவசாயம் இவைகளையே பின்பற்ற வேண்டும்” என்கிறார்கள் இயற்கை விவசாயத்தை பெரிதும் நேசிக்கும் முன்னோடி விவசாயிகள்.