கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கே.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கூடுதல் ஆட்சியர்(வருவாய்) ரஞ்சித்சிங், வேளாண்மை இணை இயக்குநர் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும் கடந்த மாதம் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த பிரச்சனைகள், கோரிக்கை மனுக்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். அப்போது விவசாயிகள் சிலர், பட்டா மாற்றம் செய்து தரக் கோரி விண்ணப்பித்து ஒரு மாதம் ஆகியும் இதுவரை அதிகாரிகள் பட்டா மாற்றம் செய்து தர மறுத்து வருவதாக கூறி திடீரென மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்கள் மாவட்ட ஆட்சியர் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் சமாதானம் செய்ய முயற்சித்தபோது, 'விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் முறையாக பதில் அளிப்பதில்லை, குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தாலும் நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறார்களே தவிர அதை செயலில் காட்டுவது இல்லை. முன்பு விவசாயிகளின் கோரிக்கைகள் உடன் நிறைவேற்றப்பட்டு கடிதம் மூலம் எங்களுக்கு தெரிவிக்கப்படும். அந்த நடைமுறை தற்போது கடைபிடிக்கப்படுவதில்லை' என விவசாயிகள் குற்றம் சாட்டினார்.
இதற்குப் பதிலளித்து பேசிய மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், "விவசாயிகளின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்வதற்காக தான் விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. பட்டா மாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதுடன் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். அதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
பின்னர் பேசிய விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் மாதவன், "கரும்பு சாகுபடி தொடங்க இருக்கும் வேளையில் தற்போது தொடர் மின்வெட்டு உள்ளதால் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தடையின்றி மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்.எல்.சிக்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் பிரச்சனைகளை பேசித் தீர்க்க வேண்டும், அம்பிகா ஆரூரான் சர்க்கரை ஆலைகளில் இருந்து விவசாயிகளின் கரும்பு நிலுவைத் தொகையை பெற்றுத் தரவும், விவசாயிகள் பெயரில் பெற்ற வங்கி கடன்களை பைசல் செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மூடப்பட்ட இரண்டு சர்க்கரை ஆலைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்" என்றார்.
விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் நிர்வாகி ரவீந்திரன் பேசும்போது, " விளை நிலங்கள் வீட்டு மனைகளாக விற்பனை செய்யும்போது வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. மாவட்டத்தில் ரூ.55 கோடியில் ஏரிகள் தூர் வரப்பட்டதாக என்.எல்.சி நிர்வாகம் கூறுவதில் விவசாயிகளுக்கு உடன்பாடில்லை. எனவே இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.